/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அலுவலர்கள் 'ஆப்சென்ட்' பொதுமக்கள் 'அப்செட்'
/
அலுவலர்கள் 'ஆப்சென்ட்' பொதுமக்கள் 'அப்செட்'
ADDED : நவ 19, 2024 06:29 AM

திருப்பூர்; கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்தில், அனைத்து அரசு அலுவலர்களும் முறையாக பங்கேற்கவேண்டும்; தங்கள் மனுக்கள் மீது, விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்பது, பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மாவட்ட அளவில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் உள்பட அதிகாரிகள், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். நடவடிக்கை எடுப்பதற்காக, அம்மனுக்கள், துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. நேற்றைய கூட்டத்தில், மக்களிடமிருந்து மொத்தம் 499 மனுக்கள் பெறப்பட்டன.
நில உரிமைச்சான்று
திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில், பல்லடத்தை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டுவந்து, நில உரிமை சான்று வழங்க கோரி அளித்த மனு:
பல்லடம் தாலுகா, வடுகபாளையம் கிராமத்தில், க.ச.எண். 60/1 ல், கைத்தறி நெசவாளர்கள் 293 பேருக்கு, பூமிதான நிலம் வழங்கப்பட்டது. மின் இணைப்பு, வங்கி கடன்கள் பெறுவதற்கு தடையின்மை சான்று தேவைப்படுகிறது. எனவே, கைத்தறி நெசவாளர்களுக்கு வீட்டுமனை உபயோக நில உரிமை சான்று வழங்க வேண்டும்.
தார் சாலையாக...
இந்திய கம்யூ., பள்ளிபாளையம் கிளை சார்பில் அளிக்கப்பட்ட மனு:
திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம், செம்மடை மாகாளியம்மன் கோவில் முதல் பாரதியார் நகர் வரை உள்ள ரோடு, பூண்டி பெரியாயிபாளையம் ரோடு மற்றும் புதிய திருப்பூர் ரோடுகளுக்கு இணைப்பு சாலையாக உள்ளது. இந்த ரோட்டை தார் சாலையாக மாற்றினால், பள்ளிபாளையம், காளம்பாளையம், பரமசிவம்பாளையம், பொங்குபாளையம் பகுதி மக்களின் போக்குவரத்து சுலபமாகும்.
ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கைவைத்தபோது, போதிய நிதியில்லை என்கின்றனர். எனவே, மாவட்ட பொது நிதியிலிருந்து, மாகாளியம்மன் கோவில் முதல் பாரதியார் நகர் வரையிலான மண் ரோட்டை, தார் சாலையாக மாற்றித்தர வேண்டும்.
பட்டா வேண்டும்
முத்தையன் நகர் பகுதி மக்கள் அளித்த மனு:
திருப்பூர் மாநகராட்சி 52வது வார்டு, முத்தையன் நகரில், 201 குடும்பங்கள் உள்ளன. இவர்களில், 71 குடும்பங்களுக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 130 குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடத்தப்படும் குறைகேட்பு கூட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்கின்றனர்; 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்படுகின்றன. அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் கூட்டத்தில் அமர்ந்திருப்பர்; கலெக்டரை நேரடியாக சந்தித்து பிரச்னைகளை மனு அளிப்பதன்மூலம், சம்பந்தப்பட்ட அதிகாரி விரைந்து தீர்வு ஏற்படுத்தி தருவார் என்கிற நம்பிக்கையிலேயே குறைகேட்பு கூட்டத்தில் மக்கள் மனு அளிக்கின்றனர்.
திருப்பூரில், மாதந்தோறும் முதல் திங்கள் கிழமை நடைபெறும் கூட்டத்தில் மட்டுமே, முதல்நிலை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அடுத்தடுத்த வாரங்களில் நடைபெறும் கூட்டங்களில், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை அலுவலர்களே பங்கேற்கின்றனர்.
அதிலும், சில அரசு அலுவர்கள், குறைகேட்பு கூட்டத்துக்கு முறையாக வருவதில்லை. காலை, 11:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை கூட்டம் நடைபெறும் நிலையில், காலதாமதமாக மதியம், 12:00 மணிக்கு வருவது; கூட்டத்துக்கு வராமல் தவிர்ப்பது என, குறைகேட்பு கூட்டத்தை அலட்சியப்படுத்துகின்றனர். சில அலுவலர்கள், கூட்டத்துக்கு வராமலேயே, நட்பில் உள்ள அலுவலர்கள் மூலம், மனுக்களை பெறுகின்றனர். இன்னும் சில அலுவலர்களோ, வருகை பதிவேட்டில் தனக்கு, வேறு அலுவலர்களை என்ட்ரி போடச் செய்துவிடுகின்றனர்.
நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், பெரும்பாலான அரசு அலுவலர்கள் பங்கேற்கவில்லை; கூட்ட அரங்கில் இருக்கைகள் காலியாக இருந்ததே இதற்கு சாட்சி. குறைகேட்பு கூட்டத்தை அலட்சியப்படுத்தும் அரசு அலுவலர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காலை, 11:00 மணிக்குப்பின், வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்க கூடாது. காலதாமதமாக வரும் அலுவலர்கள், கூட்டத்தில் பங்கேற்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.