/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரிசர்வ் சைட்டில் கோவில் அகற்ற வந்த அதிகாரிகள்
/
ரிசர்வ் சைட்டில் கோவில் அகற்ற வந்த அதிகாரிகள்
ADDED : நவ 22, 2025 05:59 AM

பல்லடம்: பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையம், ஸ்ரீநகர் பகுதியில், பொதுமக்கள் இணைந்து, ரிசர்வ் சைட்டில், விநாயகர் மற்றும் வராஹி அம்மன் கோவில் கட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, ரிசர்வ் சைட்டில் அனுமதியின்றி கோவில் கட்டப்பட்டு வருவதாக கூறி, திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த கோர்ட், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தர விட்டது.
கோர்ட் உத்தரவின்படி, நேற்று முன்தினம் காலை, வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். தகவல் அறிந்த இப்பகுதி பொதுமக்கள், கோவிலை இடிக்க விடமாட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். 'ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பை இடித்து அகற்றுமாறு நவ. 4ம் தேதியே ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோர்ட் உத்தரவை மீறி செயல்படுவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை,' என, அதிகாரிகள் கூறினர். 'நவ. 25 வரை கோர்ட் அவகாசம் வழங்கி உள்ளது. நாங்களும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். மதியம், 1:30 மணிக்கு விசாரணை நடப்பதால், அவகாசம் கொடுங்கள்,' என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மதியம், 1:30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. கோர்ட் விசாரணை 4:30 மணி வரை நீடித்ததால், அதிகாரிகள் அதுவரை காத்திருந்தனர். இதற்கிடையே, 4 வாரத்துக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுவதாகவும், அதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கோர்ட் அறிவுறுத்தியது.
இதனையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

