/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாழடையும் மகளிர் சுகாதார வளாகங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
பாழடையும் மகளிர் சுகாதார வளாகங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பாழடையும் மகளிர் சுகாதார வளாகங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பாழடையும் மகளிர் சுகாதார வளாகங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜூலை 01, 2025 09:57 PM

உடுமலை; கிராமங்களில், பராமரிப்பில்லாமல் பயன்படுத்த முடியாத நிலைக்கு மகளிர் சுகாதார வளாகங்கள் மாறியும், ஒன்றிய நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்தில், 72 ஊராட்சிகள் உள்ளன. தமிழகத்தில், 2001-04ம் ஆண்டில், அனைத்து ஊராட்சிகளிலும், மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன.
இந்த வளாகங்களில் போதிய வசதிகள் இல்லாததால், வளாகங்களை பெண்கள் பயன்படுத்தவில்லை.
இதையடுத்து, 2011-12ம் ஆண்டில், அனைத்து மகளிர் சுகாதார வளாகங்களும் புதுப்பிக்கப்பட்டு, தண்ணீர் வசதி, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
கிராம பெண்களை உள்ளடக்கிய பயன்படுத்துவோர் குழு ஏற்படுத்தப்பட்டு, பயிற்சியும் வழங்கப்பட்டது. மேலும், ஒன்றிய அலுவலர்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவும் ஏற்படுத்தி கண்காணிக்க அரசு உத்தரவிட்டது.
இதனால், பெரும்பாலான மகளிர் சுகாதார வளாகங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன. ஆனால், சில பராமரிப்பு பணிகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தினர் நிதி ஒதுக்காதது மற்றும் தண்ணீர் வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், மகளிர் சுகாதார வளாகங்கள் படிப்படியாக பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறத்துவங்கியுள்ளன.
தற்போது, மூன்று ஒன்றியங்களிலும், 70க்கும் மேற்பட்ட மகளிர் சுகாதார வளாகங்கள் பாழடைந்து, புதர் மண்டிக்கிடக்கிறது. இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
இதனால், கிராம பெண்களின் சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள் மீண்டும் அதிகரித்துள்ளது. பல முறை அரசு நிதி ஒதுக்கிய ஒரு திட்டம், ஒன்றிய, ஊராட்சி நிர்வாகங்களின் அலட்சியத்தால், வீணடிக்கப்பட்டுள்ளது அனைத்து தரப்பினரையும் வேதனையடைய செய்துள்ளது.