/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் கேட்டால் அதிகாரிகள் அலட்சியம்; புகாருக்கு மிரட்டல் பதில்
/
குடிநீர் கேட்டால் அதிகாரிகள் அலட்சியம்; புகாருக்கு மிரட்டல் பதில்
குடிநீர் கேட்டால் அதிகாரிகள் அலட்சியம்; புகாருக்கு மிரட்டல் பதில்
குடிநீர் கேட்டால் அதிகாரிகள் அலட்சியம்; புகாருக்கு மிரட்டல் பதில்
ADDED : ஜூலை 02, 2025 09:54 PM

உடுமலை; குடிநீர் தட்டுப்பாடு குறித்து புகார் தெரிவிக்க சென்றதற்கு, மடத்துக்குளம் ஒன்றிய அதிகாரிகள் மிரட்டும் தொனியில் பேசுவதாக, குமாரமங்கலம் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மடத்துக்குளம் ஒன்றியம், துங்காவி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் குமாரமங்கலம். அங்குள்ள குடியிருப்புகளுக்கு, பல வாரங்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.
இது குறித்து ஒன்றிய மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை; ஊராட்சி நிர்வாகத்தினரும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், கிராமத்துக்கு, நேற்று மடத்துக்குளம் பி.டி.ஓ., ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுக்கு வந்த தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் பெண்கள் உள்ளிட்ட மக்கள் திரண்டனர்.
'திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தண்ணீர் வருவது இல்லை. உள்ளூர் நீராதாரமான போர்வெல்லில் இருந்து உப்பு தண்ணீரையும் ஊராட்சி நிர்வாகத்தினர் வினியோகிப்பதில்லை.
குடிநீருக்காக நாள்தோறும், பல கி.மீ., தொலைவுக்கு அலைய வேண்டியுள்ளது. குறிப்பாக, விவசாய தொழிலாளர்கள் அதிகமுள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு குடிநீர் வழங்காததால், மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்,' என மக்கள் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் தரப்பில் உரிய பதில் அளிக்கவில்லை.
கிராம சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இது குறித்து கிராமத்துக்கு ஆய்வுக்கு வந்த மடத்துக்குளம் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க சென்றால், அவர்கள், மக்களை மிரட்டும் தொனியில் பேசுகின்றனர்.
கிராம பிரச்னைகள் குறித்து, சமூக ஆர்வலர்கள் எழுப்பிய கேள்விக்கும் முறையான பதில் அளிக்கவில்லை. ஒன்றிய அதிகாரிகளின் இந்த போக்கு வேதனையளிப்பதாக உள்ளது. இது குறித்து, திருப்பூர் கலெக்டரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.