/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெல் விதைப்பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு
/
நெல் விதைப்பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : அக் 28, 2024 12:28 AM

உடுமலை: அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணைகளை, விதைச்சான்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்குட்பட்ட, கல்லாபுரம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு பகுதிகளில், குறுவை நெல் சாகுபடி, 7,500 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறுவை நெல் சாகுபடியில் அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணைகளை, திருப்பூர் மாவட்ட விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குனர் மணிகண்ணன் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், குறுவை சாகுபடிக்கு ஏற்றதும், குறுகிய கால நெல் ரகங்களுமான, ஏடிடி-37, ஏடிடி-43, ஏடிடி-45, டிபிஎஸ்-5, கோ-55 ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தரமான சான்று பெற்ற விதைகளை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில், அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்கள் சார்பில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நெல் பயிரில் அமைக்கப்பட்டுள்ள இந்த விதைப்பண்ணைகளை, 85ம் நாளில், பூப்பருவ வயலாய்வு மற்றும் 95ம் நாளில், முதிர்ச்சிப்பருவ வயலாய்வு விதைச்சான்று அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது, பிற ரக கலவன்கள் நீக்கப்பட்டு, வயல் தரத்திற்கு தேறும் விதைப்பண்ணைகள் அறுவடைக்கு அனுமதிக்கப்படும்.
அறுவடை செய்யப்பட்ட நெல் விதைக்குவியல்கள், அரசு அனுமதி பெற்ற விதை சுத்தி நிலையங்களில் சுத்தி செய்யப்பட்டு, மாதிரி எடுக்கப்பட்டு, அரசு அங்கீகாரம் பெற்ற விதை பரிசோதனை நிலையத்திற்கு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பகுப்பாய்வு முடிவு அறிக்கையில், முளைப்புத்திறன், பிற ரக கலவன்கள், புறத்துாய்மை மற்றும் ஈரப்பதம் ஆகிய இனங்களில் தேர்ச்சி பெறும் விதைக்குவியல்களுக்கு ஆதார நிலைக்கு வெள்ளை நிற சான்றட்டைகள் மற்றும் சான்று நிலைக்கு நீல நிற சான்றட்டைகளும் பொருத்தப்பட்டு, தரமான சான்று பெற்ற விதைகளாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு, தெரிவித்தார்.
ஆய்வின் போது, விதைச்சான்று அலுவலர்கள் ஷர்மிளா, காயத்திரி மற்றும் விதை உற்பத்தியாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.