/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெல் விதைப்பண்ணைகளில் அதிகாரிகள் குழு ஆய்வு: தரமான விதை உற்பத்திக்கு அறிவுரை
/
நெல் விதைப்பண்ணைகளில் அதிகாரிகள் குழு ஆய்வு: தரமான விதை உற்பத்திக்கு அறிவுரை
நெல் விதைப்பண்ணைகளில் அதிகாரிகள் குழு ஆய்வு: தரமான விதை உற்பத்திக்கு அறிவுரை
நெல் விதைப்பண்ணைகளில் அதிகாரிகள் குழு ஆய்வு: தரமான விதை உற்பத்திக்கு அறிவுரை
ADDED : அக் 29, 2025 11:43 PM

உடுமலை: மடத்துக்குளம் பகுதியில், நெல் விதைப்பண்ணைகளில், விதைச்சான்றுத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பயிர் சாகுபடியில், விதைத்தேர்வு மகசூலை நிர்ணயிப்பதில் பிரதானமாக உள்ளது. சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தினால் அதிக மகசூல் பெறலாம், என்ற விழிப்புணர்வு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. விதைத் தேர்வில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
தானியமாக உற்பத்தி செய்து, விற்பனை செய்வதை விட, விதையாக உற்பத்தி செய்வதால், அதிக லாபம் கிடைப்பதுடன் விதை உற்பத்தி செய்து வழங்குவது, அதிக மன நிறைவைத்தருவதால் விதை உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வட கிழக்கு பருவமழை துவங்கி, அணைகளின் நீர்மட்டம் அதிகளவு உயர்ந்துள்ளதால், மடத்துக்குளம் வட்டாரத்தில் நெல் சாகுபடி அதிகரித்துள்ளது.
சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் சாகுபடி செய்து, விதையாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குகின்றனர். தனியார் மற்றும் அரசு உற்பத்தியாளர்கள் விதை உற்பத்தியில் பெரும்பங்காற்றி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் மணிகண்டன் கூறியதாவது:
விதை உற்பத்தி செய்ய விரும்பும் உற்பத்தியாளர்கள் அல்லது விவசாயிகள், சான்று விதைகளைப் பயன்படுத்தி விதைப்பண்ணை அமைக்க வேண்டும்.
விதைப்பு அறிக்கைகளை தயார் செய்து, சான்றட்டைகள் மற்றும் விதை வாங்கிய பட்டியலுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, திருப்பூர் மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் விதைச்சான்றளிப்பு அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வயல்தரத்தில் தேறும்பட்சத்தில் பிற இரகக் கலவன்கள் நீக்கப்பட்டு அறுவடைக்கு அனுமதிக்கப்படும்.
அறுவடை செய்யப்பட்ட விதைக்குவியல்கள், அரசு உரிமம் பெற்ற விதை சுத்தி நிலையத்தில் சுத்திப்பணி மேற்கொள்ளப்பட்டு, அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் முளைப்புத்திறன், பிற ரகக்கலவன், புறத்தூய்மை மற்றும் ஈரப்பதம் குறித்து மாதிரி முடிவுகள் பெறப்பட்டு விதைத்தரத்தில் தேறும் பட்சத்தில், சான்றட்டைபொருத்தப்பட்டு தரமான சான்று பெற்ற விதையாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.
இவ்வாறு பல்வேறு படிநிலைகளில் ஆய்வு செய்யப்பட்டு, தரமாக உற்பத்தி செய்யப்படும் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதால், அதிக முளைப்புத்திறன், பிற ரக கலப்பில்லாத தரமான விதையாக இருப்பதால் ஒரே நேரத்தில் அறுவடை செய்து அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.
ஆய்வின் போது விதைச்சான்றளிப்பு அலுவலர்கள், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

