/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தர்பூசணி கடைகளில் அதிகாரிகள் சோதனை
/
தர்பூசணி கடைகளில் அதிகாரிகள் சோதனை
ADDED : மார் 23, 2025 11:14 PM
திருப்பூர், : வெயில் கொளுத்த துவங்கியுள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில், தர்பூசணி வியாபாரம் சூடுபிடித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், மாவட்டம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட தர்பூசணி விற்பனை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:
தர்பூசணி கடைகளில் நடத்திய ஆய்வில், எந்த விதிமீறலும் கண்டறியப்படவில்லை.
நல்ல பழங்களை, பாதுகாப்பான முறையில் வைத்து விற்கவேண்டும் என, வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூஞ்சாணம், அழுகிய தர்பூசணி பழங்களை உடனடியாக அப்புறப்படுத்தி விடவேண்டும். செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது. வெட்டிய பழங்களை ஈ மொய்க்காதவகையில் மூடிவைத்து விற்பனை செய்யவேண்டும்.
நறுக்கிய தர்பூசணி துண்டுகளை, பிளாஸ்டிக் டம்ளரில் போட்டு விற்பனை செய்யக்கூடாது. தர்பூசணி மீது துாவுவதற்கு தரமான மிளகாய் துாள் பயன்படுத்த வேண்டும்.
குடோன்கள், கடைகளில், தர்பூசணி பழங்களை மண்ணில் போட்டு வைக்க கூடாது. மரப்பலகைகள் மீது வைக்கவேண்டும். எலி, பூச்சிகள் கடித்த பழங்களை விற்கக்கூடாது.
நுகர்வோர், நல்ல தரமான தர்பூசணிகளை பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். செயற்கை நிறமி சேர்க்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்தால், பரிசோதித்துக்கொள்ளவேண்டும்.
வெட்டிய தர்பூசணி பழம் மீது 'டிஷ்யூ' காகிதத்தை தேய்க்கும்போது, செயற்கை நிறமி சேர்க்கப்பட்டிருந்தால், ஒட்டிக்கொள்ளும். கண்ணாடி டம்ளரில் நறுக்கிய துண்டுகளை போட்டால், செயற்கை நிறமி நீரில் கரைந்துவிடும். தர்பூசணி உள்பட ஜூஸ் தயாரிப்பதற்கு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
புகார் தெரிவிக்கலாம்
''வியாபாரிகள், உணவு பாதுகாப்புத்துறையின் அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். தொடர் ஆய்வுகள் நடத்தி, விதிமீறும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை, 94440 42322 என்ற எண்ணிலோ அல்லது உணவு பாதுகாப்புத்துறையின் செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம்'' என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தெரிவித்தார்.