/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழமையான பள்ளி கட்டடம்; அச்சத்துடன் மாணவர்கள்
/
பழமையான பள்ளி கட்டடம்; அச்சத்துடன் மாணவர்கள்
ADDED : ஏப் 11, 2025 11:13 PM

திருப்பூர் மாநகராட்சி, 31வது வார்டு, வெங்கடாஜலபதி மாநகராட்சி துவக்கப்பள்ளியில், கொங்கு நகர், பள்ளி வீதி, அம்பேத்கர் காலனி, ஓம் சக்தி கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 40 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில், 1939ல் கட்டப்பட்ட மற்றும் 1955ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடங்களில், 2 வகுப்பறையே செயல்பாட்டில் உள்ளது. ஒரு வகுப்பறையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களும், மற்றொன்றில், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களும் சேர்ந்து அமர்ந்து படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
பழைய கட்டடம் என்பதால் இரண்டு வகுப்பறை கட்டடங்களும் பழுதாகி உள்ளன. வகுப்பறை கட்டட மேற்கூரையிலுள்ள ஓடு முழுவதும் உடைந்துள்ளது. மழை நீர் ஒழுகுவதால் மாணவர்கள் அமர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. கழிப்பறை அசுத்தமாக உள்ளது. அருகில் முட்புதர் மண்டி போய் உள்ளது. விஷ ஜந்துகள் வர வாய்ப்பு உள்ளது.
அங்கன்வாடி மையம் அருகில் ஓடுகள், கதவு, சுவர் என அனைத்தும் உடைந்து பயனற்ற நிலையில் பழைய கட்டடம் ஒன்று குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
உள்ளே நுழையும் வெளிநபர்கள்
பெற்றோர் கூறியதாவது:
கட்டடம் பழுதாகி உள்ளதால் குழந்தைகளை சேர்க்க அச்சமாக உள்ளது. பயன்பாடு இல்லாத கட்டடம் உள்ளது. பள்ளி வளாகத்தில் போதிய இடவசதி உள்ளது. புதிய கட்டடம் கட்ட மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி விடுமுறை நாட்களில் வெளி நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அசுத்தம் ஏற்படுத்துதல், ஓடுகளை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

