/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்ஜின் கோளாறால் தீ ஆம்னி பஸ் கருகியது
/
இன்ஜின் கோளாறால் தீ ஆம்னி பஸ் கருகியது
ADDED : நவ 05, 2025 01:12 AM

பல்லடம்: இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பல்லடம் அருகே, ஆம்னி பஸ் ஒன்று, தீயில் எரிந்து கருகியது.
கோவையில் இருந்து- திருச்சி செல்ல ஆம்னி பஸ் ஒன்று, நேற்று முன் தினம் இரவு, 12.30 மணிக்கு, 18 பயணிகளுடன், கோவையில் இருந்து புறப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, லட்சுமி மில் பகுதியை கடந்து செல்லும்போது, பஸ்ஸின், இன்ஜின் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. அதிர்ச்சி அடைந்த டிரைவர், பஸ்ஸை ரோட்டோரமாக நிறுத்தினார்.
அதற்குள் இன்ஜின் பகுதி தீப்பிடித்து எரிய துவங்கியது. பஸ்ஸில் இருந்த பயணிகள் அனைவரும், அவர்களது உடமைகளுடன் கீழே இறக்கி விடப்பட்டனர். அதற்குள், தீ பரவி, பஸ் கொளுந்து விட்டு எரியத் துவங்கியது. உடனடியாக, பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. பஸ் முழுவதும் தீ பரவிய நிலையில், தீயணைப்பு படை வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்குள், பஸ், தீயில் முழுவதுமாக எரிந்து கருகியது. பஸ்ஸில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள் அனைவரும், மாற்று பஸ் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆம்னி பஸ் டிரைவர், ஈரோட்டைச் சேர்ந்த லோகேஸ்வரன் 28 என்பவரிடம், பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

