/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
12ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம்; கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் ;பொறியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
/
12ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம்; கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் ;பொறியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
12ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம்; கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் ;பொறியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
12ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம்; கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் ;பொறியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
ADDED : மே 03, 2025 04:42 AM

திருப்பூர்; கல் குவாரி உரிமையாளர்கள், ஜல்லிக்கற்கள், 'எம்-சாண்ட்', 'பி-சாண்ட்' விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். கிரஷர் பொருட்கள் விலையை, யூனிட்டுக்கு, 3000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளனர். கடுமையான விலை உயர்வால், கட்டுமான தொழிலாளர், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், வீடு கட்டும் மக்கள் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கடுமையான விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி, 'பி - சாண்ட்' மற்றும் 'எம் - சாண்ட்' நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மாநில அளவிலான போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆற்று மணல் குவாரி திறக்கக்கோரியும், கட்டுமான பொருட்களை, அத்தியவாசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கக்கோரியும், மாநில அளவிலான ஒரு நாள் வேலை நிறுத்தம், 12ம் தேதி நடக்க உள்ளது.
அதன்ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்திலும் ஒரு நாள் வேலை நிறுத்தமும், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டமும் நடக்க உள்ளது. இது குறித்து ஆலோசிக்க, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமான பொறியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் வளாகத்தில் நேற்று நடந்தது.
கூட்டமைப்பு, முன்னாள் மாநில தலைவர் தில்லைராஜன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் ஸ்டாலின் பாரதி, திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் குமார் சண்முகம், திருப்பூர் பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் சுப்பிரமணியம்; திருப்பூர் ரெடிமிக்ஸ் கான்கிரீட் அசோசியேஷன் தலைவர் தண்டபாணி, திருப்பூர் மாவட்ட 'ஹலோபிளாக் அசோசியேஷன் தலைவர் தங்கவேல், 'பிளை ஆஷ் பிரிக்ஸ்' உற்பத்தியாளர்கள் சங்க மாநில துணை துணை தலைவர் சதிஷ்குமார், வெல்டிங் - கிரில் உற்பத்தியாளர் சங்க தலைவர் குணசேகர், லாரி உரிமையாளர்கள் அசோசியேஷன், திருப்பூர் மாவட்ட சிமென்ட் மற்றும் ஸ்டீல் வியாபாரிகள் நல சங்க தலைவர் ராமசாமி, கட்டுமான தொழிற்சங்க பிரதிநிதிகள், குமார் (சி.ஐ.டி.யு.,), கணேசன் (ஏ.ஐ.டி.யு.சி.,) ஆகியோர் பங்கேற்றனர்.
மாநில அளவிலான வேலை நிறுத்த போராட்டத்தை, வரும் 12 ம் தேதி, திருப்பூரில் வெற்றிகரமாக நடத்துவது என்றும், காலை, 10:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.