/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் தொகுப்பு வாங்காத கார்டுதாரர் ஒரு லட்சம் பேர்! ஒதுக்கீடு வேட்டி சேலையும் வரவில்லை
/
பொங்கல் தொகுப்பு வாங்காத கார்டுதாரர் ஒரு லட்சம் பேர்! ஒதுக்கீடு வேட்டி சேலையும் வரவில்லை
பொங்கல் தொகுப்பு வாங்காத கார்டுதாரர் ஒரு லட்சம் பேர்! ஒதுக்கீடு வேட்டி சேலையும் வரவில்லை
பொங்கல் தொகுப்பு வாங்காத கார்டுதாரர் ஒரு லட்சம் பேர்! ஒதுக்கீடு வேட்டி சேலையும் வரவில்லை
ADDED : ஜன 29, 2025 06:38 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், இந்தாண்டு ஒரு லட்சத்து ஏழாயிரம் ரேஷன் கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு தொகுப்பு பெறவில்லை. ஒதுக்கீடு செய்த வேட்டி - சேலைகளும் முழுமையாக வந்து சேரவில்லை.
பொங்கல் பண்டிகை கடந்த 14 ம் தேதி கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில், ஒருகிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து ரேஷன் கடைகளிலும், பயனாளி கார்டுதாரர்களுக்கு, கடந்த, 9ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவங்கியது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 1,135 ரேஷன்கடைகளில், மொத்தம் 7 லட்சத்து 99 ஆயிரத்து 173 கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு தொகுப்புக்கு பயனாளிகளாக சேர்க்கப்பட்டனர். கடந்த, 2020ம் ஆண்டு முதலே ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்க பணம் வழங்கப்பட்டுவந்தது.
நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில், ரொக்க பணம் இடம்பெறவில்லை. அதனால், தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற மக்கள் ஆர்வம்காட்டவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பு பெற, 18ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் மத்தியில் ஆர்வம் இல்லாதநிலையில், இந்த கால அவகாசம், மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டது.
அந்தவகையில், கடந்த 25ம் தேதியுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் முடிவடைந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், மொத்த பயனாளிகளில், 86.56 சதவீதம் பேர், அதாவது 6 லட்சத்து 91 ஆயிரத்து 824 கார்டுதாரர்கள் மட்டுமே பரிசு தொகுப்பு பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 349 கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு தொகுப்பு பெற விரும்பவில்லை.
இலவச வேட்டி - சேலை வினியோகம், வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. குறைவான ஒதுக்கீடு, தாமத வருகையால் வேட்டி - சேலை வினியோகமும் வேகம்பெறவில்லை. மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6,49,236 சேலையில் இதுவரை, 4,83,086 சேலை மட்டுமே வந்து சேர்ந்துள்ளது; அதிலும், 62 சதவீதம், அதாவது 4,01,805 சேலை மட்டுமே வினியோகிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட 6,48,590 வேட்டியில், 5,20,652 வந்து சேர்ந்துள்ளது. இவற்றில், 63 சதவீதம், அதாவது, 4,10,036 மட்டுமே வினியோகிக்கப்பட்டுள்ளது.
இன்னும் மூன்றே நாளில் வினியோகம் முடிவடைய உள்ள நிலையில், மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டதில், 1,66,150 சேலை, 1,27,938 வேட்டி இன்னும் வந்து சேரவே இல்லை.

