ஒரு சந்தை; ஓராயிரம் பிரச்னை! புகார்களுக்கு நகராத நகராட்சி நிர்வாகம் விவசாயிகள் தவிப்புக்கு விடிவு எப்போது
ஒரு சந்தை; ஓராயிரம் பிரச்னை! புகார்களுக்கு நகராத நகராட்சி நிர்வாகம் விவசாயிகள் தவிப்புக்கு விடிவு எப்போது
UPDATED : செப் 15, 2026 06:30 PM
ADDED : செப் 15, 2026 06:14 PM
உடுமலை: உடுமலை நகராட்சி சந்தை வளாகத்திற்குள், நெரிசல் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. உடுமலை நகராட்சி, சந்தை வளாகம், 6.5 ஏக்கரில் அமைந்துள்ளது. சுற்றுப்பகுதியில் விளையும், தக்காளி, வெங்காயம், கத்தரி, வெண்டை, பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை வளாகத்திலுள்ள, 34 கமிஷன் கடைகளில், ஏல முறையில் விற்பனை செய்கின்றனர்.
தினமும், 700 டன் வரை காய்கறி வரத்து உள்ளது. பிற மாவட்ட, கேரளா மாநிலம் மறையூர், மூணாறு வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர்.
வளாகத்தில், 314 நிரந்தர கடைகள் உள்ளன; வாரச்சந்தையான திங்கட்கிழமையில், நுாற்றுக்கணக்கான தற்காலிக கடைகளும் அமைக்கப்படும்; கால்நடை சந்தையும் வளாகத்தில் நடக்கிறது.
நகராட்சிக்கு ஆண்டுக்கு, 1.5 கோடி ரூபாய் வரை வருவாய் அளிக்கும் சந்தையில், அடிப்படை வசதிகள் இல்லை. காய்கறி கமிஷன் மண்டிகள், ஏராளமான பகுதியை ஆக்கிரமித்து, நிரந்தரமாக கட்டுமானங்கள் அமைத்துள்ளன. நிரந்தர காய்கறி கடைகளும், ரோட்டை ஆக்கிரமித்துள்ளன.
சந்தைக்குள் செல்ல, 5 வழித்தடங்கள் உள்ளது. சுங்க கட்டணம் வசூலுக்காக, ஒரு வழித்தடத்தில் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால், ஒரே நேரத்தில் வாகனங்கள் உள்ளே நுழைய முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது; அருகிலுள்ள ராஜேந்திரா ரோடு, பழநி ரோடுகளில், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதால், அங்கும் நெரிசல் ஏற்படுகிறது.
வளாகத்திலுள்ள ரோடுகளின் ஆக்கிரமிப்பால், இரு சக்கர வாகனங்கள் கூட நுழைய முடிவதில்லை. காய்கறிகளை பிற பகுதிகளுக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்கள் நிறுத்த இடமில்லை. மழைக்காலங்களில், சேறும், சகதியுமாக வளாகம் மாறுகிறது. சந்தையில் தினமும், வெளியாகும் நுாறு டன் காய்கறி கழிவுகள் முறையாக அகற்றப்படாமல், குவித்து வைக்கப்படுவதால், துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்படுகிறது.
வளாகத்தில், 60 புதிய கடைகள் கட்டும் பணி முடியவில்லை. கிழக்கு, தெற்கு பகுதியில், புதர் மண்டி, திறந்த வெளி கழிப்பிடமாக, மது அருந்தும் மையமாக உள்ளது.
வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தி, வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும். காய்கறி கமிஷன் கடைகளுக்கு இடம் வரையறை செய்ய வேண்டும்.
