/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சிகளில் 'ஆன்லைன்' வரி வசூல்! குழப்பம் நிலவுவதாக பொதுமக்கள் புகார்
/
ஊராட்சிகளில் 'ஆன்லைன்' வரி வசூல்! குழப்பம் நிலவுவதாக பொதுமக்கள் புகார்
ஊராட்சிகளில் 'ஆன்லைன்' வரி வசூல்! குழப்பம் நிலவுவதாக பொதுமக்கள் புகார்
ஊராட்சிகளில் 'ஆன்லைன்' வரி வசூல்! குழப்பம் நிலவுவதாக பொதுமக்கள் புகார்
ADDED : ஜூன் 11, 2025 06:47 AM
திருப்பூர்; கிராம ஊராட்சிகளில் 'ஆன் லைன்' வாயிலாகவே அனைத்து வரியினங்களும் வசூலிக்கப்படும் நிலையில், திருத்தம் செய்வதற்கான வசதி இல்லாததால், நில ஆவணப்பதிவு, மின் இணைப்பு பெறுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை கடந்த காலங்களில், ஊராட்சி செயலர்களே வரி வசூலித்து வந்தனர். அதாவது, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வாங்கும் வரித் தொகைக்கு, மனித ஆற்றல் வாயிலாக ரசீது வழங்கி வந்தனர்.
கடந்த ஓராண்டாக 'ஆன்லைன்' வாயிலாக வரி வசூலிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. கட்டட அனுமதி துவங்கி, வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களும், 'ஆன்லைனில்' வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், அதில், திருத்தம் செய்வதில், தொழில்நுட்ப பிரச்னை நீடிக்கிறது.பொதுமக்கள் சிலர் கூறியதாவது:
'ஆன்லைன்' வாயிலாக வரி செலுத்தும் போது, சில நேரங்களில் பெயர், முகவரி, வீட்டு முகவரி, கதவு எண் உள்ளிட்ட பதிவு செய்யும் போது, பிழை ஏற்பட்டு விடுகிறது. இந்த பிழையை சரி செய்ய முடிவதில்லை. பிழையுடனே ரசீதை பெற்றுச் செல்ல வேண்டியுள்ளது.வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்கும், வீடுகளை விற்க, வாங்கவும், வீட்டு ஆவணங்களை அடமானமாக வைத்து கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வரி செலுத்தியதற்கான ரசீதை தாக்கல் செய்ய வேண்டியிருக்கிறது.
பிழையுடன் உள்ள ரசீது, ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே, அந்த ரசீதில், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பிழைத்திருத்தம் செய்து, சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதனால், அலைச்சல், நேர விரயம் ஏற்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ''ஆன்லைன் 'எடிட் ஆப்ஷனில்' சில தொழில்நுட்ப பிரச்னை இருக்கிறது. விரைவில் சரி செய்யப்படும் என, உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்,'' என்றனர்.