/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பதிவு பெற்றவை ஏழு நுகர்வோர் அமைப்பு மட்டுமே! 'லெட்டர் பேடு' சங்கங்கள் கண்காணிக்கப்படுமா?
/
பதிவு பெற்றவை ஏழு நுகர்வோர் அமைப்பு மட்டுமே! 'லெட்டர் பேடு' சங்கங்கள் கண்காணிக்கப்படுமா?
பதிவு பெற்றவை ஏழு நுகர்வோர் அமைப்பு மட்டுமே! 'லெட்டர் பேடு' சங்கங்கள் கண்காணிக்கப்படுமா?
பதிவு பெற்றவை ஏழு நுகர்வோர் அமைப்பு மட்டுமே! 'லெட்டர் பேடு' சங்கங்கள் கண்காணிக்கப்படுமா?
ADDED : மே 24, 2025 11:12 PM
திருப்பூர்: 'திருப்பூர் மாவட்டத்தில் முறையாக பதிவு புதுப்பிப்பு செய்து, பதிவுத்துறையின் அங்கீ காரம் பெற்ற நிலையில், 7 நுகர்வோர் சங்கங்கள் மட்டுமே செயல்படுகின்றன' என்பது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
பதிவு செய்யப்படாத மற்றும் 'லெட்டர் பேடு' நுகர்வோர் சங்கத்தினரின் செயல்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நுகர்வோர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் ஏராளமானோர் செயல்படுகின்றனர். மக்களின் பிரச்னைகள், அரசியல் சார்ந்த மற்றும் சாராத பொது பிரச்னைகள் என, அனைத்திலும் தலையிடுகின்றனர்.
இதன் வாயிலாக, ஆதாயம் அடைவோரும் ஏராளம். அதே நேரம், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் நுகர்வோர் குறைகேட்பு கூட்டங்கள், பிரதி திங்களன்று நடக்கும் மாவட்ட கலெக்டரின் குறைகேட்பு கூட்டங்கள் என அனைத்திலும் பங்கேற்று, மக்களின் பிரச்னைகள் குறித்து பேசுகின்றனர்; சிலர் அதிகாரிகளை மிரட்டவும் கூட செய்கின்றனர்.
இதனால், பதிவு பெற்று, முறையாக செயல்படும் நுகர்வோர் அமைப்பினர் யார், பதிவு செய்யப்படாத அமைப்பினர் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்வதில் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.
இந்நிலையில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் படி, மாவட்ட பதிவுத்துறையின் கீழ், 45 நுகர்வோர் சங்கங்கள் பதிவு செய்துள்ள நிலையில், ஏழு சங்கங்கள் மட்டுமே தற்போது வரை பதிவு புதுப்பிப்பு செய்து, அங்கீகாரம் பெற்ற சங்கங்களாக செயல்படுகின்றன என்ற விபரம் தெரிய வந்துள்ளது.
அதன்படி, கொங்கு மெயின் ரோட்டில் செயல்படும், தி கன்ஸ்யூமர் புரெடக்ஷன் சென்டர்; பூண்டியில் செயல்படும் தி கன்ஸ்யூமர் கேர் அசோசி யேஷன்; திருப்பூர் முத்து நகரில் செயல்படும் கன்ஸ்யூமர் அவேர்னெஸ் விங்; காங்கயம் சாலையில் செயல்படும் நல்லுார் நுகர்வோர் நல மன்றம்; புதிய திருப்பூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், பனியன் சிட்டி கன்ஸ்யூமர் வெல்பேர் அசோசியேஷன் மற்றும் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் என, ஏழு சங்கங்கள் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன.
பதிவு பெற்ற நுகர்வோர் அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், 'பதிவு பெற்ற சங்கத்தினர் முன்வைக்கும் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு, மாவட்ட நிர்வாகம் கொண்டு சென்று, தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
அதே நேரம், பதிவு புதுப்பிப்பு செய்யப்படாத சங்கங்கள் மற்றும் லெட்டர் பேடு அளவில் மட்டுமே செயல்படும் சங்கத்தினரின் செயல்பாடுகளை கண்காணிப்பதுடன், அத்தகைய சங்கத்தினர் குறைகேட்பு கூட்டங்களில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட வேண்டும்,' என்றனர்.