/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாய்க்கால் பாதையில் திறந்தவெளி 'பார்'
/
வாய்க்கால் பாதையில் திறந்தவெளி 'பார்'
ADDED : மார் 18, 2025 04:40 AM

பல்லடம்: பல்லடம் அருகே, பி.ஏ.பி., வாய்க்காலை ஒட்டியுள்ள வழித்தடம், திறந்தவெளி பாராக பயன்பட்டு வருவது, பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
ராயர்பாளையத்தில், பி.ஏ.பி., பாசன வாய்க்கால் உள்ளது. இதையொட்டி செல்லும் பாதை, மங்கலம் ரோட்டுடன் திருப்பூர் ரோட்டை இணைக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர். சமீப காலமாக, இந்த வழித்தடம் 'குடி'மகன்களின் பிடியில் உள்ளது.
அப்பகுதியினர் கூறியதாவது:
வீடுகள், விவசாய நிலங்களை ஒட்டி உள்ள வாய்க்கால் பாதையை, பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதில், 'குடி'மகன்கள் சிலர் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில், அப்பகுதி திறந்தவெளி 'பார்' ஆக மாறி விடுகிறது. இதன் காரணமாக, இந்த பாதையை பயன்படுத்தவே அச்சமாக உள்ளது.
இதுதவிர, மது அருந்திய பின், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், நெகிழி பைகள் உள்ளிட்டவற்றை ரோட்டிலேயே விசி செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கண்ணாடி பாட்டில்கள், நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் கால்நடைகளின் கால்களை பதம் பார்க்கிறது.
இது குறித்து, போலீசாரும் கண்டுகொள்வதில்லை. எனவே, 'சிசிடிவி' கேமரா அமைத்து கண்காணித்து, சமூக விரோத செயல்களை மோலீசார் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.