பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர்..திறக்கணும்!: பாசன விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர்..திறக்கணும்!: பாசன விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
UPDATED : செப் 26, 2026 03:24 AM
ADDED : செப் 25, 2026 05:00 PM

உடுமலை: பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன பகுதிகளில், கடும் வறட்சி ஏற்பட்டு தென்னை மரங்கள் காய்ந்து வருவதோடு, கால்நடைகள், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என கோரி, கோவை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், திருப்பூர், கோவை மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து, நீர் வழங்கப்படும் நிலையில், இரண்டாம் மண்டல பாசனத்திலுள்ள, 95 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த, ஆக., மாதம் நீர் திறந்திருக்க வேண்டும்.
நடப்பாண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால், திட்ட தொகுப்பு அணைகளில், நீர் இருப்பு குறைந்து காணப்படுகிறது.
வழக்கமாக, பாசனத்திற்கு நீர் திறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன், பிரதான கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய்கள் துார்வாருதல், புனரமைத்தல் மற்றும் மடைகள் மாற்றி அமைப்பதற்கு, ஆண்டு பராமரிப்பு நிதி ஒதுக்கப்படும்.
நடப்பாண்டு, ரூ.19.4 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பிய நிலையில், இதுவரை நிதி ஒதுக்கவில்லை.
பருவ மழைகள் ஏமாற்றிய நிலையில், பாசன பகுதிகளில் கடும் வறட்சி நிலை ஏற்பட்டு, தென்னை உள்ளிட்ட நிலைப்பயிர்கள் காய்ந்து வருகின்றன. பொதுமக்கள், கால்நடைகளுக்கு கூட குடிநீர் இன்றி, கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திட்ட தொகுப்பு அணைகளில், நீர் இருந்தும், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக அரசு நிதி ஒதுக்கி, பராமரிப்பு பணி மேற்கொள்ளவும், பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தியும், தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், கோவை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், அந்தியூர் பகுதியில், ரோடு மறியல் போராட்டம் நடந்தது.
மாவட்டச்செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மதுசூதனன், விவசாயிகள் சங்க செயலாளர் குமார் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் கூறியதாவது :
புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், திட்ட குழு சார்பில், அமைச்சர்கள், சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களை அணுகி, நிதி ஒதுக்க கோரப்பட்டது.
ஆனால், கடந்த 3 மாதமாக நிதி ஒதுக்கவில்லை. இரு மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், அதிகாரிகளிடம் பேசியதோடு, பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை.
தற்போது, கடும் வறட்சி ஏற்பட்டு, பாதி தென்னை மரங்கள் காய்ந்து விட்டன; மீதம் இருக்கும் மரங்களும், காய்ப்பு இழந்து, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றன.
நிலத்தடி நீர்மட்டம் சரிவால், மக்கள், கால்நடைகளுக்கு குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அணையில் நீர் இருந்தும், பாசன பகுதிகள் வறட்சியால் பாதித்துள்ளன.
உரிய நிதி ஒதுக்காமல், பி.ஏ.பி., விவசாயிகளை வஞ்சிக்கும் செயலில், அரசும், அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். நிதி ஒதுக்காமல் கலையமாட்டோம். இவ்வாறு, ஆக்ரோஷமாக கூறினர்.
