/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பன்முக கால்நடை மருத்துவமனை திறப்பு
/
பன்முக கால்நடை மருத்துவமனை திறப்பு
ADDED : பிப் 13, 2024 01:16 AM

திருப்பூர்;திருப்பூரில் 2.69 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பன்முக கால்நடை மருத்துவமனை, திறப்பு விழா கண்டது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே, கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவமனை செயல்படுகிறது. அங்குள்ள நுாறாண்டு பழமை வாய்ந்த கட்டடத்தில், கால்நடை மருத்துவமனை செயல்படுகிறது. கால்நடை நோய் புலனாய்வு பிரிவு, பல்கலை பயிற்சி மையமும் செயல்படுகின்றன.
இங்குள்ள கால்நடை மருத்துவமனை, கடந்த, 2019ல், பன்முக கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. நவீன மருத்துவ உபகரணங்களுடன், 24 மணி நேர சேவை வழங்கப்படுகிறது. ஒரு பிரதம மருத்துவர் மேற்பார்வையில், 4 கால்நடை மருத்துவர்கள் சுழற்சி முறையில், பணிபுரிகின்றனர். ஆடு, மாடு, எருமை, குதிரை உள்ளிட்ட கால்நடைகள், நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு, 24 மணி நேரம் சிகிச்சை வழங்கப்படுகிறது.
நோயின் தன்மை கண்டறியப்பட்டு, கால்நடைகளுக்கு, நவீன ஸ்கேனிங் உபகரணம் வாயிலாக சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை, அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது.இந்த வளாகத்தில், 2.69 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பன்முக கால்நடை மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி, 2022 ஏப்., முதல் தேதி துவங்கியது. கட்டுமானப்பணிகள் முடிந்து, திறப்பு விழா காண்பதில் இழுபறி நீடித்த நிலையில், நேற்று முன்தினம், திருப்பூருக்கு வந்த அமைச்சர் உதயநிதி, காணொலி வாயிலாக, பன்முக மருத்துவமனை கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பன்முக மருத்துவமனை கட்டடத்தில் அறுவை சிகிச்சை உபகரணம் உட்பட அதி நவீன உபகரணங்கள் பொருத்தப்பட வேண்டியுள்ளது. அவை, சப்ளை செய்யும் நிறுவனத்தினர் தான், அப்பணியை செய்தாக வேண்டும்; கட்டடம் முழுமையாக பயன்பாட்டுக்கு வர, குறைந்தது, 15 நாளாகும்,' என்றனர்.