/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்க உத்தரவு
/
கிராம வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்க உத்தரவு
ADDED : ஜன 16, 2025 11:33 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், 265 ஊராட்சிகளிலும், வரும் 26ம் தேதி குடியரசு தின கிராமசபா கூட்டம் நடைபெற உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கிராமசபாவில் இடம் பெறவேண்டிய தீர்மானங்கள் குறித்த விவரங்கள், அனைத்து ஊராட்சிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளில், கடந்த 2024, ஏப். 1 ம் தேதி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கைகளுக்கு, கிராமசபாவில் ஒப்புதல் பெறவேண்டும்.
2024 - 25ம் நிதியாண்டில், எந்தெந்த திட்டத்தில், எவ்வளவு மதிப்பீட்டில் என்னென்ன பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன; அப்பணிகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்கள் கிராமசபாவில் வைக்கப்படவேண்டும்.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளான, அனைத்து கிராமங்களிலும் துப்புரவு பணி மேற்கொள்ளுதல், அரசு அலுவலகங்களை சுத்தம் செய்தல், மேல்நிலை, தரைமட்ட நீர் தேக்க தொட்டிகளை மாதம் இருமுறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட கொசு ஒழிப்பு பணிகள் குறித்து விவாதிக்கவேண்டும்.
15வது மத்திய நிதி மானியக்குழு வழங்கும் மானிய நிதியில், 2025 - 26ம் நிதியாண்டில் கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளவேண்டிய பணிகள், வசதிகளை தொகுத்து வளர்ச்சி திட்டம் தயாரிக்கவேண்டும். 2025 - 26ம் ஆண்டுக்கான, கிராம வளர்ச்சிக்கு, நிறைவான குடிநீர் திட்டம், வறுமை குறைப்பு திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்களுக்கான செயல்திட்டங்கள் தயாரிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் திட்டமிடல் இயக்கம்
மக்கள் திட்டமிடல் இயக்கத்தின்போது, இரண்டு சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். முதல் கிராமசபா கூட்டத்தில், திட்டமிடுதல் குறித்து விவாதிக்கவேண்டும்; இரண்டாவது கிராமசபா கூட்டத்தில், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்கவேண்டும்.
கிராம வளர்ச்சி திட்டம் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பிற துறை சார்ந்த முன்களப்பணியாளர்கள், கட்டாயம் இரண்டு கிராமசபா கூட்டங்களிலும் பங்கேற்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2025 - 26ம் நிதியாண்டுக்கான கிராம வளர்ச்சி திட்டத்துக்கு கிராமசபாவில், ஒப்புதல் பெற வேண்டும்.