/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை மேலாண்மையில் அமைப்பினர் ஆர்வம்; ஒத்துழைப்பு தருமா மாநகராட்சி நிர்வாகம்
/
குப்பை மேலாண்மையில் அமைப்பினர் ஆர்வம்; ஒத்துழைப்பு தருமா மாநகராட்சி நிர்வாகம்
குப்பை மேலாண்மையில் அமைப்பினர் ஆர்வம்; ஒத்துழைப்பு தருமா மாநகராட்சி நிர்வாகம்
குப்பை மேலாண்மையில் அமைப்பினர் ஆர்வம்; ஒத்துழைப்பு தருமா மாநகராட்சி நிர்வாகம்
ADDED : ஆக 13, 2025 01:12 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் குப்பை கொட்ட இடமில்லாததால், வார்டு களில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை அகற்ற முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
இது, மாநகராட்சி நிர்வாகத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிற அதே நேரம், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் மத்தியில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
திருப்பூர் 'ட்ரீம் - 20' பசுமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் கூறியதாவது:
மில்லியன் டாலர் வர்த்தகத்தை அரசுக்கு அள்ளித்தரும் திருப்பூரின் அவல நிலையாக, நகர் முழுவதும் குப்பையால் நிரம்பி, சுகாதாரகேடு ஏற்பட்டு வருகிறது. குப்பை பிரச்னையில் இருந்து மீண்டு வர, நிரந்தரமான எதிர்கால தீர்வு நோக்கி பயணிக்க வேண்டும்.
தனி அதிகாரி மேற்பார்வையில், குப்பையை பிரித்து கையாள்வதை தவிர வேறு வழியில்லை. மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், குப்பையை அகற்றாவிட்டால் ஏற்படும் துர்நாற்றம், நோய் தொற்று ஏற்படுத்தி விடும்.
பிளாஸ்டிக் கழிவுகளால் சாக்கடை கால்வாய் அடைபட்டு, குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகும் அபாயமும் உள்ளது.
கிடப்பில் திட்டம்! கடந்த, 2017ல் 'நெகிழியில்லா திருப்பூர் திட்டம்' வாயிலாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் பாலிதீன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்புடன் கிட்டத்தட்ட, 45 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
கொரோனாவுக்கு பின் வந்த அதிகாரிகள் இதனையும், பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணையையும் பின்பற்றப்படவில்லை. குப்பை மேலாண்மையில் சரியான திட்டமிடல் இல்லாததன் விளைவு, பாறைக்குழியிலும் குப்பை கொட்ட முடியாத நிலை, மாநகராட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. இனியும் இந்த விவகாரத்தில் தாமதிக்காமல், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாதிப்பு அதிகமாகும்
'நம்ம ஊரு; நாம தான் பார்த்துக்கணும்' என்ற அடிப்படையில் மக்களின் நலன் காக்க, அரசு மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து செயலாற்றி, 'நெகிழி இல்லா திருப்பூர்' என்ற நிலையை எட்ட, மீண்டும் எங்களின் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினர்.
பொறுப்பேற்க தயார்!
மாநகராட்சி இரண்டாம் மண்டலத்தில் உள்ள வார்டுகளில் குப்பையை தரம் பிரித்து பெற்று தர தயாராக இருப்பதாகவும், இப்பணிக்கு பயன்படுத்தப்படும் குப்பைத் தொட்டி மாதிரிகளை காண்பித்து, பிரித்து வழங்கப்படும் குப்பையை மாநகராட்சி துாய்மைப் பணியாளர்கள் முறையாக கையாள்வதற்குரிய நிலையை உருவாக்கித்தர வேண்டும் எனவும், ட்ரீம் 20 அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
பொறுப்புணராத நிலை
உடுமலையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வர், மாவட்டத்தின் நலன் சார்ந்து, ஆணைமலையாறு - நல்லாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், குப்பை மேலாண்மையில் திணறி வரும் நிலையில், இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லவோ, அதற்கான திட்டத்தை அறிவிக்க செய்வதற்கான ஏற்பாடுகளையோ செய்யாதது வருத்தம் தருகிறது எனவும், சுட்டிக்காட்டியுள்ளனர்.