/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேம்பாலம் பணிகள் இழுபறி : திணறும் வாகனங்கள்
/
மேம்பாலம் பணிகள் இழுபறி : திணறும் வாகனங்கள்
ADDED : பிப் 26, 2026 06:07 AM

உடுமலை: நான்கு வழிச்சாலை - தாராபுரம் ரோடு சந்திப்பு பகுதியில், பணிகள் இழுபறியாக நடப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்படுகிறது.
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், உடுமலை பகுதியில், திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு மேம்பாலங்கள், அணுகுசாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நீண்ட காலமாக இழுபறியாக நடக்கிறது.
பணிகள் நிறைவு பெறும் முன்பே, நான்கு வழிச்சாலையில், போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், நான்கு வழிச்சாலைக்காக மேம்பாலமும், சந்திப்பு பகுதியில், அணுகுசாலை மேம்படுத்தும் பணியும் நடக்கிறது. இரு ரோடுகளில் இருந்தும் வரும் வாகனங்கள், அப்பகுதியில் விலகிச்செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. ரோட்டோரத்தில், தடுப்பு கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட குழியும் மூடப்படவில்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
நான்கு வழிச்சாலையில் வரும் கனரக வாகனங்களும், சந்திப்பு பகுதியை திணறியபடி கடக்க வேண்டியுள்ளது.
மேம்பாலம் மற்றும் இதர பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் விரைவாக முடிக்க வேண்டும்; பணிகள் நடைபெறும் இடத்தில், தேவையான எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

