/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சியுடன் இணைக்க ஊராட்சிகள் எதிர்ப்பு
/
நகராட்சியுடன் இணைக்க ஊராட்சிகள் எதிர்ப்பு
ADDED : பிப் 08, 2025 06:34 AM
திருப்பூர்; தாராபுரம் நகராட்சியுடன் நஞ்சியம்பாளையம் மற்றும் கவுண்டச்சிபுதுார் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் நேற்று மனு அளித்தனர்.
நஞ்சியம்பாளையம் ஊராட்சி மக்கள் அளித்த மனு:
நஞ்சியம்பாளையம் ஊராட்சியில், கடந்த ஜன. 26ல் நடந்த கிராம சபா கூட்டத்தில், பொதுமக்கள் 550 பேர் பங்கேற்றோம். ஊராட்சியை, தாராபுரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தோம். கிராமசபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நுாறு நாள் வேலை திட்டத்தில், நஞ்சியம்பாளையம் ஊராட்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைகின்றனர். எங்கள் ஊராட்சியில் 75 சதவீதம் விவசாய பூமியாக உள்ளது. தாராபுரம் நகராட்சியுடன் இணைந்தால், எங்கள் பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, ஊராட்சியை தாராபுரம் நகராட்சியுடன் இணைக்கக்கூடாது.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
கவுண்டச்சிபுதுார் ஊராட்சி மக்கள் அளித்த மனு:
எங்கள் ஊராட்சியில் தொழில் வளம் ஏதுமில்லை. பல குடும்பத்தினர் குடிசை, ஓட்டு வீடுகளில் வசித்துவருகின்றனர். தாராபுரம் நகராட்சியுடன் இணைத்தால், கனவு இல்லம், நுாறு நாள் வேலை திட்டங்கள் ரத்தாகிவிடும். ஆதிதிராவிடர், பழங்குடியின குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். குடிநீர் கட்டணம், வீட்டு வரி பலமடங்கு அதிகரிக்கும். கிராமப்புற ஏழை குழந்தைகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை, இட ஒதுக்கீடுகள் பாதிக்கப்படும். தொடர்ந்து ஊராட்சியாகவே செயல்பட அனுமதிக்கவேண்டும்; நகராட்சியுடன் இணைக்க கூடாது.
இவ்வாறு, அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.