/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூங்கா புதர்மயம்; மழைநீரில் மூழ்கிய 'ரூ.30 லட்சம்'
/
பூங்கா புதர்மயம்; மழைநீரில் மூழ்கிய 'ரூ.30 லட்சம்'
பூங்கா புதர்மயம்; மழைநீரில் மூழ்கிய 'ரூ.30 லட்சம்'
பூங்கா புதர்மயம்; மழைநீரில் மூழ்கிய 'ரூ.30 லட்சம்'
ADDED : நவ 18, 2024 06:26 AM

பல்லடம் ; பல்லடம் அடுத்த கரைப்புதுார் ஊராட்சி, அம்மன் நகர் பகுதியில், 30 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.
இத்துடன், உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
போதிய பராமரிப்பு இன்றி, பூங்கா முழுவதும் புதர்கள் நிரம்பியுள்ளன. விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் உள்ளிட்டவை துருப்பிடித்து கிடக்கின்றன.
உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்கள் அனைத்தும் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்து பழைய இரும்பாக காட்சியளிக்கின்றன. பூட்டிக்கிடக்கும் உடற்பயிற்சி கூடத்தின் பூட்டு உட்பட அனைத்தும் துருப்பிடித்துள்ளன.
பூங்காவின் நிலை இவ்வளவு மோசமாக இருக்க, சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, சிறுவர் பூங்கா, குளமாக மாறி உள்ளது. சிறுவர்கள் விளையாடும் இடம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து, கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றன.
புதர் மண்டி கிடப்பதால், அவ்வப்போது விஷ ஜந்துக்களும் உலா வருகின்றன.
ஆபத்தை உணராமல் சிறுவர்கள் பலர் மழை நீருக்குள் விளையாடி வருகின்றனர். பாதுகாவலர் இல்லாததால், பூங்காவுக்குள், இரவு நேரங்களில், சமூகவிரோத செயல்கள் நடப்பதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மக்களின் வரிப்பணம், 30 லட்சம் ரூபாய் மழை நீரில் மூழ்கி கிடக்கிறது.