/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தலைமை தபால் நிலையம் முன் தடுமாற வைக்கும் 'பார்க்கிங்' பிரச்னை
/
தலைமை தபால் நிலையம் முன் தடுமாற வைக்கும் 'பார்க்கிங்' பிரச்னை
தலைமை தபால் நிலையம் முன் தடுமாற வைக்கும் 'பார்க்கிங்' பிரச்னை
தலைமை தபால் நிலையம் முன் தடுமாற வைக்கும் 'பார்க்கிங்' பிரச்னை
ADDED : மார் 29, 2025 06:15 AM

திருப்பூர் : திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் முன் குறுகிய சாலை காரணமாக இட நெருக்கடி தொடர்கிறது. இவ்விடத்தில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், விபத்து அபாயம் உள்ளது. போலீசார் கண்காணித்தும், நெரிசலும், சிரமங்களும் குறைந்தபாடில்லை. பார்க்கிங் மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
சத்தியமங்கலம், தாராபுரம், மேட்டுப்பாளையம் ஆகிய மூன்று தபால் அலுவலகங்களுக்கான கோட்ட தலைமை கண்காணிப்பாளர் அலுவலகமாக, திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் இயங்குகிறது. தினசரி அலுவல் நடவடிக்கைக்காக தபால் அலுவலர், ஊழியர்களே, 50க்கும் மேற்பட்டோர் புறநகரில் இருந்து தலைமை தபால் அலுவலகம் வருகின்றனர்.
பல்வேறு சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்த, பணமெடுக்க, கணக்குகளை சரிபார்க்க, போஸ்ட்கார்டு, ஸ்டாம்ப், ஆதார் அட்டை தொடர்பான பரிவர்த்தனை, பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற, போட்டோ எடுக்க என்பன உள்ளிட்ட பல அலுவல்களுக்கு, 500 பேர் வருகின்றனர். இவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்ல பார்க்கிங் இடமில்லை. இதனால், ரோட்டின் இருபுறமும் தாறுமாறாக டூவீலர்களை நிறுத்துவதால், ரயில்வே மேம்பாலம், சபாபதிபுரம், ஊத்துக்குளி ரோட்டுக்கு செல்லும் கனரக வாகன ஓட்டிகள் தபால்நிலை சந்திப்பை கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.
ஒரே நேரத்தில் இரு கனரக வாகனங்கள் எதிரெதிரே வந்தால், பாதசாரிகள் சாலையை விட்டு கிழே இறங்கி விட வேண்டும். டூவீலர்கள் ஒதுங்கி நிற்க கூட வழியில்லை. தலைமை தபால் நிலையம் முன் பார்க்கிங் முறைப்படுத்த வேண்டும் அல்லது தபால்நிலையத்தை இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இப்படி யோசிக்கலாமே !
தபால் நிலையத்துக்கு அருகிலேயே மாநகராட்சிக்கு சொந்தமான குமரன் வணிக வளாகத்தின் பின் காலியிடம் உள்ளது. இங்கிருந்து தபால் அலுவலகத்துக்கு வரவும் (மேம்பால நடைபாதையில்) வழி உள்ளது. எனவே, மாநகராட்சி -தபால்துறை ஆலோசித்து பார்க்கிங்க்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து விட்டால், தலைமை தபால் நிலையம் முன் நெரிசல் குறையும். போக்குவரத்து நெருக்கடியும் தவிர்க்கப்படும்.
ஒரு புறம் பார்க்கிங்
போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (திருப்பூர் வடக்கு) பாண்டியராஜன் கூறுகையில்,'ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணி நடக்கிறது. குமரன் நினைவிடத்தில் இருந்து ஸ்டேஷனுக்குள் வாகனங்கள் செல்வதில்லை. உள்ளே செல்லும் வாகனங்கள், வெளியேறும் வாகனங்கள் (தபால் நிலையம் எதிரே) ஒரே வழியில் சென்று வருவதால், நெரிசல் அதிகமாகியுள்ளது. அந்த பணி முடிந்த பின், ஆலோசித்து மாற்று ஏற்பாடு செய்யப்படும். போலீசார் தினசரி பார்க்கிங்கை ஒழுங்குபடுத்துகின்றனர். நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்தை கண்காணிக்கின்றனர். தபால் நிலையம் எதிரே குறுகலான சாலை என்பதால், ஒருபுறம் மட்டும் பார்க்கிங் அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,'' என்றார்.