/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பார்த்தீனிய களை விவசாயிகள் கவலை
/
பார்த்தீனிய களை விவசாயிகள் கவலை
ADDED : ஜன 15, 2024 12:28 AM
உடுமலை:உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், பருவமழை சீசனையொட்டி, பல ஆயிரம் ஏக்கரில், விவசாய சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக, சாகுபடி சீசனில், பார்த்தீனியம் களைச்செடி பரவலால், விவசாயிகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
பார்த்தீனியம் களைச்செடி வறட்சியை தாங்கி வளரும். நிலத்தில் பரவும் விதை மழை பெய்ததும், மீண்டும் முளைக்கும். சுற்றுச்சூழலுக்கும், கால்நடைகளுக்கும் இந்த செடியால் பாதிப்பு ஏற்படுகிறது. சாகுபடியில், ஒவ்வொரு முறையும், பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு, களைக்கொல்லி தெளித்து, இவ்வகை களைச்செடிகளை கட்டுப்படுத்துகின்றனர்.
இருப்பினும், அடுத்த சீசனில், மீண்டும் வேகமாக பரவுகிறது. அதிக களைக்கொல்லி தெளிப்பதால், மண் வளமும் பாதிக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன், பார்த்தீனியம் களைச்செடியை கட்டுப்படுத்த, தமிழக அரசு தரப்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறுகிய நாட்களில், இத்திட்டம் கைவிடப்பட்டது.
பார்த்தீனிய செடிகளை அழிக்க, உயிரியல் முறையில், மெக்சிகன் வண்டு பயன்படுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த வண்டுகள் இளம் களைச்செடிகளை, மேலிருந்து கீழ் நோக்கி உண்டு விடும். எனவே, இவ்வகை வண்டுகளை, வேளாண் பல்கலை மற்றும் வேளாண்துறை வாயிலாக அதிகளவு உற்பத்தி செய்து, விவசாயிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கலாம். இது குறித்து தமிழக அரசு, வேளாண்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.