sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

டாப் கியரில் கட்சிகள்

/

டாப் கியரில் கட்சிகள்

டாப் கியரில் கட்சிகள்

டாப் கியரில் கட்சிகள்


ADDED : நவ 11, 2024 05:26 AM

Google News

ADDED : நவ 11, 2024 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரும் 2026ல் தமிழக சட்ட சபைத் தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் நிறைவடைந்தது முதலே, சட்டசபைத் தேர்தலுக்கு ஆயத்தமாவதில், அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. கூட்டணிக் காட்சிகள் மாறலாம் என்றாலும், தங்கள் நிலைகளை வலுப்படுத்துவதிலும், வாக்கு வங்கியைத் தக்கவைப்பது மற்றும் உயர்த்துவதிலும் கட்சிகளின் கவனம் திரும்பியுள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் திருத்தத்தில் கவனம்; வாக்குச்சாவடி முகவர் குழு அமைப்பு, இளம் வாக்காளர் மீது அக்கறை என திருப்பூரில் உள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள் களத்தில் சுறு சுறுப்பாகியுள்ளனர்.

வீட்டுக்கு வீடு பலன் தி.மு.க.,வின் யுத்தி


தினேஷ்குமார், திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க., செயலாளர்: சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த ஆட்சியின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியன அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் இந்த ஆட்சியின் ஏதாவது ஒரு திட்டம் கட்டாயம் சென்று பலன் அளித்துள்ளது.

இதுகுறித்து வீட்டுக்கு வீடு தெளிவாக எங்கள் பிரசாரம் அமையும். வாக்குச்சாவடி முகவர் குழுவைப் பொறுத்தவரை எங்கள் தொகுதியில் உள்ள 386 வாக்குச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணியில் தேர்தல் பிரிவினருடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.இத்தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என தலைமை அறிவித்துள்ளது. அதை நோக்கி கட்சியினர் பணியாற்றி வருகிறோம்.

ஆதரவு வாக்காளர்கள் அ.தி.மு.க., வியூகம்


குணசேகரன், மாநில இணைச் செயலாளர், அ.தி.மு.க., - ஜெயலலிதா பேரவை: ஒவ்வொரு நிர்வாகியும் ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த இளம் வாக்காளரை கண்டறிந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில், வாக்காளர் பட்டியல், பகுதி வாரியாக பிரித்து, பகுதி செயலாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் களப்பணியில் ஈடுபடுகின்றனர்.

புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பில், கட்சியின் முகவர்கள், உதவ வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 2025 செப்., 30ம் தேதி நிலவரப்படி, 18 வயது பூர்த்தி யடையும் நபர்களை கண்டறிந்து, வாக்காளராக பெயர் பதிவு செய்யவும் தனி குழு அமைத்துள்ளோம்.

வார்டு மற்றும் கிளை 'பூத் கமிட்டி' வாரியாக, வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து, ஏற்கனவே உள்ள அ.தி.மு.க., ஆதரவு வாக்காளர் பெயர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இளம் வாக்காளர்களை கண்டறிந்து, அவர்கள் பெயர்களை சேர்க்கவும், குடிபெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி அளவில் வலுப்படுத்துகிறது பா.ஜ.,


செந்தில்வேல், தலைவர், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.,: முழுவீச்சில் பா.ஜ., களமிறங்கியுள்ளது. புதிதாக கிளை தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கிளை தலைவருக்கான தேர்வு இன்று நடக்கிறது. பிரதமரின் மனதின் குரல், சமூக வலைதளம், வாக்குச்சாவடி என, ஒவ்வொரு துறையாக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட உள்ளனர். வாக்குச்சாவடி அளவில் வலுப்படுத்த அனைத்துவிதப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

மக்களுடன் தொடர்பில் இருப்பவர், சேவை போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு நியமனம் நடைபெறும். தற்போது வரை திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் என, மூன்று தொகுதிகளிலும், 60 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். மாநில தலைவர் அண்ணாமலை வருகைக்காக காத்திருக்கிறோம். அவர் வந்த பின், வரும் சட்டசபை தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடக்கும்.

வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியல் சேகரிப்பில் காங்.,


கோபால்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர், காங்கிரஸ்: காங்கிரஸ் முதுபெரும் கட்சி என்பதால், ஏற்கனவே பல பகுதிகளில் வாக்குச்சாவடி முகவர் குழு அமைக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது. தற்போது, அவற்றில் ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டியிருப்பின், அதற்கான பணிகளை துவக்கியுள்ளோம்.

திருப்பூர் வடக்கில், 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள், திருப்பூர் தெற்கில், 280க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் என மொத்தம், 580க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு யார், யார் பணிபுரிய வேண்டும், மாறுதல் செய்ய வேண்டியிருக்குமா என்பது மாநில தலைமை கேட்டுள்ளது. அதற்கான விபரங்களை பட்டியல் சேகரித்து, தனிக்குழு அமைத்து தயாரித்து வருகிறோம்.

வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தலில் எப்படிக் களம் காணப்போகிறோம் என்பதை தொடர்ந்து, வெற்றிக்கான வியூகங்களை காங்கிரஸ் வகுக்கும்.

இளைஞர்கள் படை'நாம் தமிழர்' திட்டம்


சுரேஷ் பாபு, மாநில இணைச் செயலாளர், நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை: சட்டசபை தேர்தலுக்கான பணிகள், ஒவ்வொரு மாவட்ட அளவிலும், 234 தொகுதி அளவிலும் ஓராண்டுக்கு முன்பே துவங்கப்பட்டு விட்டது. வாக்குச்சாவடி அளவில் உறுப்பினர்களை கூடுதலாக சேர்த்து, பொறுப்பாளர் நியமனம் தொடர்ந்து வருகிறது.

இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் இளைஞர்கள் பத்து பேர் இருக்கும் வகையில், அமைப்பு அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆறு மாதமாக கட்சி தலைவர் சீமான் இதை நேரடியாக கண்காணித்து, மாநிலத்தின் ஒருபகுதியை நிறைவு செய்து, மற்றொரு பகுதியில் பயணித்து வருகிறார்.

தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு த.வெ.க., சார்பில் அறிக்கை


பாலமுருகன், தலைவர், திருப்பூர் மத்திய மாவட்ட த.வெ.க.,: கட்சியின் மாநில மாநாடு நாடே வியக்கும் வகையில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக மண்டல மாநாடுகள் நடத்தப்படும். இதன் மூலம் மக்கள் மனதில் என்ன எண்ண ஓட்டம் உள்ளது என்பது தெளிவாகும். தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை அனைத்து தொகுதியிலும் வாக்குச்சாவடி முகவர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உரிய பகுதியைச் சேர்ந்த வாக்காளர் பட்டியலில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றிய கட்சியினர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் தொகுதி வாரியாக 5 ஆண் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 7 பேர் கொண்ட குழு அனைத்து தொகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் நேரடியாக மக்களைச் சந்தித்து பகுதிவாரியாக உள்ள குறைகள், ஒட்டு மொத்த மாவட்ட மற்றும் மாநில அளவிலான எதிர்பார்ப்பு மற்றும் தேவைகள் குறித்து கேட்டறியப்படும். திருப்பூரைப் பொறுத்த வரை கடந்த 3 ஆண்டாக தொழில் நிலவரம் சரியாக இல்லை. பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினர் மற்றும் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கருத்து பெறப்படும்.

இவை கட்சி தலைமைக்கு அறிக்கையாக அளிக்கப்பட்டு தேர்தல் வாக்குறுதியில் அவற்றை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us