ADDED : ஆக 21, 2025 11:27 PM

திருப்பூர்; மத்திய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமர இருக்கை வசதியின்றி வெயிலில் வாடும் அவலம் நிலவுகிறது.
திருப்பூர், காமராஜ் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான மத்திய பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. இதன் உட்புறம் பல்வேறு பகுதிகள் சென்று வரும் டவுன் பஸ்கள், வெளியூர் பஸ்கள் நின்று திரும்புகின்றன. பஸ் ஸ்டாண்டின் வெளிப்புறத்தில் ஆட்டோ நிறுத்த திட்டமிட்டு இடம் ஒதுக்கப்பட்டது. அதன்பின், கைவிடப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் இயங்கத் துவங்கிய போது, அந்த இடத்தில் மினி பஸ்கள் வந்து திரும்பின.
தற்போது இங்கு டவுன் பஸ்கள் சில வழித்தடங்களுக்கு இப்பகுதியில் இருந்து புறப்படும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் பஸ்கள் நின்று செல்லும் திட்டம் இல்லாத காரணத்தால் அங்கு பயணிகள் அமர இருக்கை வசதியோ, வெயில் மற்றும் மழைக்கான நிழற்கூரை வசதியோ அமைக்கப்படவில்லை. இருப்பினும் பஸ்கள் நிற்பதால் பயணிகள் அப்பகுதியில் காத்திருக்கும் நிலை உள்ளது.
ஆனால், உட்கார இருக்கை இல்லாமல் பஸ்கள் நிற்குமிடத்தில் வெயிலிலும், ஆபத்தான நிலையிலும் பயணிகள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் உரிய ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.