மது போதையில் ஓட்டுநர் அட்டகாசம் 'ரூட்'டை மாற்றியதால் பயணிகள் கூச்சல்
மது போதையில் ஓட்டுநர் அட்டகாசம் 'ரூட்'டை மாற்றியதால் பயணிகள் கூச்சல்
ADDED : மார் 22, 2026 05:09 AM
திருப்பூர்: தாராபுரத்தில், மது போதையில் இருந்த டிரைவர், வழிதடத்தை மாற்றி பஸ் இயக்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து தனியார் பஸ் ஒன்று வழக்கமாக காலை, 6:30 மணிக்கு புறப்பட்டு, கரூருக்கு 8:30 மணிக்கு சென்று அடையும்.
நேற்று முன்தினம் காலை, நடத்துனர் லோகேஸ்வரன் அருகே உள்ள கடைக்கு சென்ற நிலையில், பஸ் டிரைவர் ஆனந்த், 38, முன்னதாகவே பஸ்சை கிளப்பினார்.
பழநி ரோடு பழைய அமராவதி பாலம் வழியாக கரூர் செல்லாமல், ஒட்டன்சத்திரம் ரோட்டில் சென்றது. வழித்தடம் மாறியும், தாறுமாறாக பஸ் ஓடியது. நடத்துனரும் வராத காரணத்தால், பயணிகள் அச்சமடைந்தனர். பயணி ஒருவர், டிரைவரிடம் விசாரிக்க அருகில் சென்ற போது, மதுபோதையில் இருப்பது தெரிந்தது. உடனே, பயணிகள் கூச்சலிட்டனர்.
அதன்பின், வழி மாறி செல்வதை தெரிந்து, பஸ்சை திருப்பிய போது, வளைவில் சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
பஸ் மாயமானது குறித்து நடத்துனர் தகவலின் பேரில், தாராபுரம் போலீசார் விசாரித்தனர். ரோந்து பணியில் இருந்த போலீசார், பஸ்சை நிறுத்தி, டிரைவரிடம் விசாரித்தனர். டிரைவர் ஆனந்துக்கு மதுபோதையில் இயக்கியதற்கு, அபராதம் மட்டும் விதித்து, பஸ்சை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
