ADDED : டிச 09, 2024 04:50 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்கள் அதிகம் தேங்குவதால், மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
நகரம் மற்றும் கிராம நத்தம் நிலம் தொடர்பான விவரங்கள் முழுமையாக ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன. இதுநாள்வரை, நத்தம் நிலம் தொடர்பான சேவைகள், காகித வடிவில் இருந்தன; கடந்த சில மாதங்களாக 'ஆன்லைன்' முறைக்கு மாறியுள்ளது.
நத்தம் நில விவரங்கள், புலவரைபடங்கள் என, அனைத்து பதிவுகளும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, ஆன்லைன் சேவைக்கு மாற்றப்பட்டன. அதில், பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன. மாவட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் சரிபார்த்த பிறகும், அதிக அளவிலான குளறுபடியும், தவறுகளும் நடந்துள்ளன.
பாமர மக்கள், ஆன்லைன் சேவையில் சிட்டா பெறலாம் என்ற தகவல் கூட தெரியாமல் இருக்கின்றனர். தகவல் அறிந்தவர்கள், தங்கள் சொத்துக்கான சிட்டா விவரத்தை சரிபார்த்தனர். அப்போது, சிட்டாவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
வருவாய்த்துறையினர் பணியில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அந்தவகையில், நத்தம் சிட்டாவிலும் சிலரது விவரங்கள் தவறாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து தாலுகா அலுவலகங்களில் விசாரித்த போது, அந்தந்த உரிமையாளர்தான், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சரிசெய்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.
பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள், 'இ-சேவை' மையம் வாயிலாக விண்ணப்பித்தும், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துணை தாசில்தார் அளவில், சரியான புரிதல் இல்லாமல், தள்ளுபடி செய்யப்படுகிறது. பொது 'இ-சேவை' மையத்தில், பட்டா மாறுதலுக்கு, கம்ப்யூட்டர் சிட்டா மற்றும் வில்லங்க சான்று எடுத்து, பதிவு செய்ய, தலா, 120 ரூபாய் வசூலிக்கின்றனர்.
'இ- சேவை' மையங்களில் பதிவு செய்ய, அரை நாள் வரை காத்திருந்து பதிவு செய்கின்றனர்; அப்படியிருந்தும், உரிய கவனம் செலுத்தாத காரணத்தால், பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மாவட்ட அளவில் குவிந்து கொண்டே இருக்கின்றன.
----
நத்தம் நில விவரங்கள், புலவரைபடங்கள் என, அனைத்து பதிவுகளும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, ஆன்லைன் சேவைக்கு மாற்றப்பட்டன. அதில், பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன.