/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தலைமுறை கடந்தும் கிடைக்காத பட்டா; போராட்டம் அறிவித்த பொதுமக்கள்
/
தலைமுறை கடந்தும் கிடைக்காத பட்டா; போராட்டம் அறிவித்த பொதுமக்கள்
தலைமுறை கடந்தும் கிடைக்காத பட்டா; போராட்டம் அறிவித்த பொதுமக்கள்
தலைமுறை கடந்தும் கிடைக்காத பட்டா; போராட்டம் அறிவித்த பொதுமக்கள்
ADDED : ஜூலை 20, 2025 11:18 PM

பல்லடம்; கடந்த, 1992ம் ஆண்டு, திருப்பூரில் பெய்த கனமழையால், நொய்யல் நதிக்கரையில் இருந்த பல குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அதில், தங்கள் உடைமைகளை இழந்து ரோட்டுக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல்லடம் அடுத்த, அறிவொளி நகரில் தற்காலிகமாக குடியேற வைக்கப்பட்டனர்.
இடம் பெயர்ந்த, 1,008 குடும்பங்கள் பட்டா கேட்டு கடந்த, 32 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அரசு தரப்பில் இருந்து எந்தவித பதிலும் கிடைக்காத நிலையில், திருப்பூர் வரும் முதல்வரால், இதற்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன், கடையடைப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.
மக்கள் பிரதிநிதிகள் பொய் வாக்குறுதி
போராட்டக் குழுவினர் கூறுகையில், 'மாவட்ட நிர்வாகம் மூலம் தான் இங்கு குடி பெயர்ந்தோம். அப்போது, இந்த இடம் மேய்ச்சல் புறம்போக்கு என்பது கூட எங்களுக்கு தெரியாது.
நாங்கள் குடி பெயர்ந்த இப்பகுதிக்கு அறிவொளி நகர் என்ற பெயர் சூட்டியதே அதிகாரிகள் தான்.
ஆறு மாத குத்தகை பட்டா அடிப்படையில் இங்கு குடியமர்த்தப்பட்டோம். அதன் பிறகு, பட்டா குறித்து கேட்டால், அதிகாரிகளிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை.
ஒவ்வொரு தேர்தலின் போதும், பட்டா பெற்று தருவதாக, மக்கள் பிரதிநிதிகள் வாக்குறுதி அளித்து ஏமாற்றி வருகின்றனர். ஓட்டுக்காக மட்டுமே எங்களை பயன்படுத்தி வருகின்றனர். பட்டாவை தவிர்த்து, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்தும் உள்ளது.
பட்டா இல்லாததால், வங்கி கடன் உட்பட, எந்த ஒரு சலுகையையும் எங்களால் பெற முடியவில்லை. இரண்டு தலைமுறை கடந்தும் பட்டா கிடைக்கவில்லை. அடுத்த தலைமுறையாவது பட்டா பெற்று பயன்பெறுவார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
திருப்பூர் வரும் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 22ம் தேதி(நாளை) கடையடைப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.