/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதிமீறலுக்கு அபராதம்; மின்வாரியம் அதிரடி
/
விதிமீறலுக்கு அபராதம்; மின்வாரியம் அதிரடி
ADDED : அக் 21, 2024 04:03 AM
திருப்பூர் : திருப்பூர் வடக்கு தாலுகா பகுதியில் உள்ள, வெங்கமேடு மின் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு கடைகள் உள்ளன.
கடையின் மின் இணைப்பு, மாநகராட்சி கமிஷனர் பெயரில் இருந்தாலும், வாடகைக்கு கடை நடத்துபவர் மின் கட்டணம் செலுத்துவது வழக்கம்.
மாறாக, மாநகராட்சி அலுவலர்கள் உதவியுடன், வாடகை கடைக்கான மின் கட்டணத்தை, கமிஷனர் பெயரில், மாநகராட்சி நிர்வாகம் செலுத்தி வந்துள்ளது; மாநகராட்சிக்கு வருவாய் இழப்புஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டத்தில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இரண்டு கடைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, 26 ஆயிரத்து, 617 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'வெங்கமேடு பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு கடைகளுக்கு, 2023 ஏப்., மாதம் முதல், மாநகராட்சி நிர்வாகமே மின் கட்டணம் செலுத்தும் வகையில், மாற்றம் செய்யப்பட்டது, விசாரணையில் தெரியவந்தது. மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக, மாநகராட்சி கமிஷனர் பெயர் செலுத்திய மின் கட்டணத்தை திரும்ப மாநகராட்சி கணக்கில் திருப்பி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முறைகேடு குற்றத்துக்காக, இரண்டு கடை உரிமையாளருக்கும் 26 ஆயிரத்து, 617 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்தினால் மட்டுமே, கடைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும்,'' என்றனர்.