/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அபராத வரி விதிப்பு; மக்கள் அதிர்ச்சி
/
அபராத வரி விதிப்பு; மக்கள் அதிர்ச்சி
ADDED : ஜன 01, 2025 05:31 AM
திருப்பர் : திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர் பாஷா கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டல அலுவலகத்தில் நேற்று சொத்து வரி செலுத்துவதற்கு, பொதுமக்கள் பலரும் சென்றிருந்தனர். எனது வீட்டுக்கு கடந்த, மே மாதமே சொத்து வரி செலுத்தியிருந்தேன். அந்த தொகைக்கு, தற்போது நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்திருந்தனர்.
காலம் தவறி செலுத்தப்படும் சொத்து வரிக்கு அபராதம் விதிக்கும் அரசின் அறிவிப்பு, ஜூன் மாதத்துக்கு பின் தான் நடைமுறைக்கு வந்தது. ஆனால், அதற்கு முன்பே நான் வரி செலுத்திய நிலையில், அதிகாரிகள் அபராதம் வசூலித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வரி செலுத்த வந்த பலருக்கும் இதுபோன்று அபராதம் வசூலிக்கப்பட்டதால், மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. 'அபராதம் விதித்தது தவறு' என, அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மாநகராட்சி அதிகாரிகள், எனது பெயரில் கேட்பு அறிவிக்கை வழங்கிய நிலையில், கம்ப்யூட்டரில் எனது பெயருக்கு பதிலாக வேறு ஒருவரின் பெயர் வருகிறது. 'இந்த தவறு எப்படி நிகழ்ந்தது?' என்ற கேள்விக்கும், அதிகாரிகளிடம் உரிய பதில் இல்லை. அதோடு 'கம்ப்யூட்டர் சர்வரில்' ஏற்பட்ட பழுது காரணமாக, வெகு நேரம் வரிசையில் காத்திருந்து, வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
லஞ்சத்துக்கு வழி
பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'வரி இனங்களை செலுத்துவோரின் பெயர், மாநகராட்சி அலுவலர்கள் வழங்கும் கேட்பு அறிவிப்பில் அசலாகவும், கம்ப்யூட்டர் பதவில் வேறு பெயரும் இருப்பது, வியப்பளிக்கிறது. இதனை சரி செய்து தருவதாக இடைத்தரகர் போன்று செயல்படும் சிலர், பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் சூழ்நிலை கூட இருக்கிறது. இதுபோன்ற நிர்வாக குளறுபடி, கையூட்டுக்கு வழி ஏற்படுத்தும்,' என்றனர்.