ADDED : அக் 23, 2024 11:45 PM

திருப்பூர்: முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்ட புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் நடந்த குறைகேட்பு முகாமில், இரு தரப்பையும் அழைத்து போலீசார் சுமுக தீர்வு ஏற்படுத்தினர்.
கே.வி.ஆர்., நகர் சரகத்துக்கு உட்பட்ட சென்ட்ரல், தெற்கு மற்றும் மகளிர் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் தொடர்பாக, இரு தரப்பிடம் விசாரணை நடத்த போலீஸ் தரப்பில் சம்மன் வழங்கி ஆஜராக அறிவுறுத்தினர்.
நேற்று காலை பெரிச்சிபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் குறைகேட்பு முகாம் நடந்தது. கே.வி.ஆர்., நகர் உதவி கமிஷனர் நாகராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, உதயகுமார் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.
முகாமில், இரு தரப்பிடம் விசாரித்த போலீசார், 38 மனுக்களுக்கு சுமுக தீர்வு ஏற்படுத்தினர். 15 மனுக்கள் நிலுவையில் உள்ளது. நிலம் தொடர்பான சில வழக்குகளுக்கு கோர்ட் மூலம் தீர்வு காணும் வழிமுறைகளை போலீசார் எடுத்துரைத்தனர். நல்லுார் ஸ்டேஷனில் உள்ள, புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டது. மாயமானவர்கள் தொடர்பான புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
குறைகேட்பு முகாம் மூலம் மனுக்களுக்கு தீர்வு காணுதல் சுழற்சி முறையில் வாரத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு சரக பகுதியில் போலீசார் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால், வழக்கு பதிவாகாமல், மனுக்கள் அளவில் நீண்ட காலம் தீர்வு காணாமல் நிலுவையில் உள்ளவற்றுக்கு வழி பிறந்துள்ளதாக முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.

