/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திரண்டு வந்து மனு; தீர்வு எதிர்பார்க்கும் மக்கள்
/
திரண்டு வந்து மனு; தீர்வு எதிர்பார்க்கும் மக்கள்
ADDED : ஜூன் 09, 2025 11:43 PM

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ், தனி துணை கலெக்டர் பக்தவத்சலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயராமன் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.
மதுபாட்டில் மாலையுடன்...
மக்கள் பாதுகாப்பு அமைப்பினர், கழுத்தில் மதுபாட்டில்களை மாலையாக அணிந்து வந்து, ''குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும்''என கோஷம் எழுப்பினர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனு:
பெரும்பாலான 'டாஸ்மாக்' மதுக்கடை பார்களில் சட்ட விரோதமாக முழு நேரமும் மது விற்பனை நடைபெறுவதால், குற்ற செயல்கள் அதிகரிக்கிறது. மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பறையிலும், 60 முதல் 70 குழந்தைகள் படிப்பதால், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, கற்பித்தல், கற்றலில் சிரமம் ஏற்படுகிறது. நேரடியாக ஆய்வு செய்து, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
தரையில் அமர்ந்து...
தாராபுரம் தாலுகா, சின்னக்காம்பாளையம் பகுதி மக்கள், திரண்டு வந்து, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர். அவர்கள் அளித்த மனு:
சின்னக்காம்பாளையத்தில் செயல்படும் கோழிப்பண்ணையால், ஈ தொல்லை அதிகரித்து, சுகாதார கேடு ஏற்படுகிறது; கால்நடை வளர்ப்பு பாதிக்கிறது. கோழிப்பண்ணையை அகற்றக் கோரி வழங்கப்பட்ட மனு அடிப்படையில், தாராபுரம் தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில், ''பண்ணையை சுத்தமாக வைத்துக் கொள்வதாகவும், ஆறு மாதம் அவகாசமும், பண்ணை உரிமையாளர்கள் கேட்டனர்; இதை ஏற்பதாக இல்லை எனக்கூறி விட்டோம். சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வரும் கோழிப்பண்ணையை உடனடியாக தடை செய்யாவிட்டால், வரும், 13ம் தேதி கோழிப்பண்ணையை முற்றுகையிடுவோம், என்றனர்.
மக்களை திரட்டி...
த.வெ.க., வினர், பொதுமக்களை திரட்டி வந்து அளித்த மனு:
திருப்பூர் மாநகராட்சி, 4, 5வது வார்டுகளில் உள்ள பாறைக்குழிகளில், குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் வெளியேறும் துர்நாற்றத்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வந்து செல்வோர், குடியிருப்பு பகுதி மக்களுக்கு சுகாதார பாதிப்பு ஏற்படுத்தும்; பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதை தவிர்த்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
சம்பளம் கேட்டு...
மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் அளித்த மனு:
திருப்பூர் மாநகராட்சியில், 60 வார்டுகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், டிரைவர்களுக்கு, கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் வழங்க வேண்டும். மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் இ.எஸ்.ஐ., - பி.எப்., க்கான சம்பள ரசீது வழங்க வேண்டும். காலை, 6:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை பணி நேரம் நிர்ணயிக்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை அளிக்க வேண்டும். விபத்து,இயற்கை மரணம் அடைவோரின் குடும்பத்தினருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவை தவிர, கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் சென்று வர ஏதுவாக, பஸ் வசதி கேட்டு, திருப்பூர், பி.என்., ரோடு இந்திரா நகர் பகுதி மக்கள் மனு வழங்கினர். திருப்பூர் மாநகராட்சி, 52வது வார்டு, முத்தையன் நகர் கிழக்கு மற்றும் மேற்கு வீதிகளில், 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும், 250 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி, அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், மொத்தம் 378 மனுக்கள் பெறப்பட்டன.