ADDED : பிப் 07, 2024 12:55 AM

திருப்பூர்:மங்கலம் ரோடு, கதர் காலனி பகுதி மக்கள் குடிநீர் வழங்க கேட்டு மறியல் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சி, 43வது வார்டு மங்கலம் ரோடு, கருவம்பாளையம், கதர் காலனியில், 150 வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு பல்வேறு காரணங்களால் குடிநீர் வழங்கி 25 நாட்களுக்கு மேலாகிறது.
இந்நிலையில், நேற்று இப்பகுதிக்கு குடிநீர் சப்ளை வழங்கப்பட்டது. ஆனால், குழாய் இணைப்புகளில் குடிநீர் வரவில்லை. கதர் காலனி பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யும் பிரதான குழாய் சேதமடைந்தது தெரிந்தது.அப்பகுதியில் ரோடு அமைக்கும் பணிக்கு சமன் செய்யும் பணியில் பொக்லைன் இயந்திரம் ஈடுபட்ட போது, குடிநீர் குழாய் சேதமாகியுள்ளது.
இதனால், பெருமளவு குடிநீர் அதில் வழிந்தோடி ரோட்டில் வீணாகியது. ஆவேசமடைந்த பொதுமக்கள் மங்கலம் ரோட்டில் மறியல் செய்தனர். சில நிமிடம் நீடித்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அப்பகுதிக்கு சென்று மக்களுடன் பேச்சு நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'ஏற்கனவே குடிநீர் வந்து, 25 நாளாகிறது. தற்போது குடிநீர் கிடைக்கவில்லை என்றால் மேலும் ஒரு மாதமாகி விடும். ஒரு நாளில் குழாய் உடைப்பை சரி செய்து, மீண்டும் இப்பகுதிக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். உரிய நடவடிக்கை இல்லாவிடில் மீண்டும் போராட்டம் நடத்துவோம்,' என்றனர்.
