ADDED : பிப் 09, 2024 12:18 AM

அனுப்பர்பாளையம் : பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து, ''நிர்வாக காரணங்களுக்காக 2 மாதத்தில் வேறு இடத்திற்கு மாற்றப்படும்'' என்று ரங்கநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி, கொங்கு மெயின் ரோடு ரங்கநாத புரத்தில் டாஸ்மாக் மதுக்கடை (என் : 1909) பாருடன் செயல்பட்டு வருகிறது.
மதுக்கடை அருகில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன.
'குடி'மகன்களால் மருத்துவமனை வரும் நோயாளிகள், பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மது அருந்த வருபவர்கள் ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மதுக்கடையை அகற்ற வேண்டும். என இ.கம்யூ கட்சியினர், அப்பகுதி பொது மக்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு டாஸ்மார்க் நிர்வாகத்தினர், ''இரண்டு மாத காலத்தில் மதுக்கடையை இங்கிருந்து இடமாற்றம் செய்து கொள்கிறோம்'' என போராட்டக் குழுவினரிடம் உறுதி அளித்தனர்.
அதன் அடிப்படையில் டாஸ்மாக் நிர்வாகம் நேற்று காலை நிர்வாக காரணங்களுக்காக மதுக்கடை இரண்டு மாதத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும். என கடை முன்பு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
----
ரங்கநாதபுரம் டாஸ்மாக் கடையில், 2 மாதத்தில் கடை இடமாற்றம் செய்யப்படும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
