/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை லாரியை தடுத்து நிறுத்திய மக்கள்
/
குப்பை லாரியை தடுத்து நிறுத்திய மக்கள்
ADDED : ஜூன் 12, 2025 06:27 AM

அனுப்பர்பாளையம்: நெருப்பெரிச்சல் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரியை த.வெ.க.,வினர் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினசரி 800 டன் குப்பைகள் சேகரமாகின்றன.
சேகரமாகும் குப்பைகள், நெருப்பெரிச்சல் பத்திர பதிவு அலுவலகம் அருகில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்படுகின்றன.
சில நாட்கள் முன், 'துர்நாற்றம் வீசுகிறது' என்று கூறி, அப்பகுதியினர், குப்பை கொட்ட வந்த லாரியை சிறை பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த அதிகாரிகள் 'துர்நாற்றம் வீசாத வகையில் கிருமி நாசினி தெளிக்கப்படும்' என வாக்குறுதி அளித்தனர். கிருமி நாசினி தெளித்து, தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வந்தது.
நேற்று தமிழக வெற்றி கழகத்தினர் மற்றும் அப்பகுதியினர், 'தொடர்ந்து துர் நாற்றம் வீசுகிறது. குடியிருக்க முடியவில்லை. இனி இங்கு குப்பை கொட்ட கூடாது' என குப்பை லாரியை சிறை பிடித்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கட்சி மற்றும் பொது மக்களை சமாதானம் செய்தனர். மண் போட்டு, துர்நாற்றம் வீசாதவாறு பார்த்து கொள்வதாக கூறினர்.
பொதுமக்கள் ஏற்று கொள்ளவில்லை.
அதிகாரிகள், 'இனி இங்கு குப்பை கொட்ட மாட்டோம்' என உறுதி கூறியதை தொடர்ந்து, கட்சியினர் சிறை பிடித்த லாரியை விடுவித்தனர்.
---
நெருப்பெரிச்சல் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்த மக்கள்.