/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் திரண்ட மக்கள்
/
பொங்கல் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் திரண்ட மக்கள்
பொங்கல் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் திரண்ட மக்கள்
பொங்கல் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் திரண்ட மக்கள்
ADDED : ஜன 15, 2024 01:27 AM

திருப்பூர்;பொங்கலுக்கு பொருட்களை வாங்க, திருப்பூரில் கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
பொங்கல் பண்டிகைக்காக ரேஷனிலேயே கரும்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும், நீளமான, தடிமனான கரும்புகள், திருப்பூரில் நேற்று விற்பனையாகின. ஒரு ஜோடி 70 முதல், 90 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சற்று உயரமான ஜோடி, 100 ரூபாய்க்கு விற்றது.
வழக்கமான நாட்களில், 20 ரூபாய் விற்கப்படும் மஞ்சள் நேற்று, 30 ரூபாய். வெற்றிலை ஒரு கவுலி, 70 ரூபாய். புதிய பொங்கல் பானை குறைந்தபட்சம், 150 ரூபாயில் இருந்து, பெரியது, அழகிய வர்ணம் தீட்டியது, 500 ரூபாய் வரை விற்கப்பட்டது.
கிராமங்களில் கண் திரும்பும் இடமெல்லாம் மரங்கள் இருப்பதால், வேப்பிலை கிடைக்கும். ஆவாரம்பூ ஒரு சில இடங்களில் பார்க்க முடியும். இவற்றை அங்கிருந்து நகருக்குள் கொண்டு வந்ததால் என்னவோ நேற்று, வேப்பிலைக்கு விலை கிடைத்தது. கட்டு, பத்து ரூபாய்க்கு விற்றது.
அதனுடன் மாவிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ சேர்த்து 30 ரூபாய் என விற்றனர். போகி நாளில் வீட்டில் காப்புக்கட்ட வேண்டும் என்பதால், பலரும், நுாறு ரூபாய் அளவுக்கு வாங்கிச் சென்றனர்.
விசேஷ நாட்களில் வீட்டில் சாணம் மெழுகுவது நம் பாரம்பரியம். நேற்று, திருப்பூர் ராயபுரம் பகுதியில் ஒரு மூட்டை சாணத்தை எடுத்து நன்கு மண்ணில் புரட்டி, உருண்டையாக பிடித்து, பத்து ரூபாய் என விற்பனை செய்தனர். சாணத்துடன் மண் சேர்ந்ததால், அளவில் பெரிதாக தெரிந்தது. பலரும் வாங்கிச் சென்றனர்.
மாட்டுப்பொங்கல் தினத்தை கொண்டாட புதிய மூக்கணாங்கயிறு, சாட்டை உள்ளிட்டவற்றை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டினர். ஆண்டுக்கு ஒருமுறை தான் அதுவும் ஒரு சிலர் தான் வாங்குகின்றனர் என்பதால், விலை உயர்த்தப்படவில்லை. கயிறு 35 முதல், 50 ரூபாய், சாட்டை,40 ரூபாய்க்கு விற்றது.