/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்
/
குப்பை லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்
ADDED : மார் 21, 2025 02:02 AM

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினசரி 700 முதல் 800 டன் வரை குப்பை சேகரமாகிறது. சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சி சார்பில், லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு, பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள ஒரு பாறைக் குழியில் கொட்டப்பட்டு வருகிறது.
குப்பை கொட்டும் போது, அப்பகுதி பொதுமக்கள் குப்பையால் நிலத்தடிநீர் பாதிக்கப்படும், துர்நாற்றம் வீசும், என குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேயர் மற்றும் அதிகாரிகள், 'நிலத்தடி நீர் பாதிக்காத வகையில் மண் கொட்டப்படும்; துர்நாற்றம் வீசாத வகையில் தினசரி கிருமிநாசினி தெளிக்கப்படும். எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் பராமரிக்கப்படும்,' என உறுதி கூறினர். தொடர்ந்து அங்கு குப்பை கொட்டப்பட்டு வந்தது.
நேற்று காலை அப்பகுதியினர் நுாற்றுக்கும் மேற்பட்டோர், 'குப்பையில் இருந்து துர்நாற்றம் வருகிறது. மருந்து தெளிப்பதில்லை. முறையாக மண் போடுவதில்லை. குடியிருக்க முடியவில்லை.
மாநகராட்சி அதிகாரிகள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை,' என கூறி குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, குப்பையுடன் வந்த லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், குப்பை கொட்ட வந்த லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டது. தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் குப்பையால் எந்த பாதிப்பும் வராது என உறுதி கூறியதை தொடர்ந்து, உடனடியாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. லாரி மூலம் மண் கொண்டு வரப்பட்டு, பரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதனை பார்வையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.