/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒப்பாரி போராட்டம் நடத்திய மக்கள்
/
ஒப்பாரி போராட்டம் நடத்திய மக்கள்
ADDED : நவ 21, 2025 06:33 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நான்கு கிராம மக்கள், கிராமசபாவை புறக்கணித்தனர். முதலிபாளையத்தில், பொதுமக்கள் கழிவுநீரை பாடையில் சுமந்துவந்து, ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தி, கிராமசபாவை புறக்கணித்தனர்.
முதலிபாளையம் பாறைக்குழியில் பத்து ஆண்டுகளாக மாநகராட்சி குப்பை கொட்டப்பட்டதால், நிலத்தடி நீர், மண் மிக மோசமாக மாசடைந்துள்ளது. இதையடுத்து, பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, முதலிபாளையம் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அம்மக்கள், நேற்று முன்தினம், மாநகராட்சி அலுவலகம் முன், குடியேறும் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில், குப்பை மேலாண்மை மையம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இடுவாய், ஆறுமுத்தாம்பாளையம் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம், மறியல், கடையடைப்பு என அடுத்தடுத்த போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கிராமசபா புறக்கணிப்பு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், குப்பை கொட்டுவதால் விவசாயம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதலிபாளையம், இடுவாய் பகுதி மக்கள், கிராமசபாவில் மனு அளித்துள்ளனர். ஆனாலும், மாநகராட்சி நிர்வாகத்தின் குப்பை கொட்டும் நடவடிக்கைகள் தடுக்கப்படாது, மக்கள் மத்தியில் கிராமசபா மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னையை மையப்படுத்தி, முதலிபாளையம், இடுவாய், 63 வேலம் பாளையம், ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி மக்கள், அக்.3 மற்றும் நவ.1ம் தேதி கிராமசபாவை புறக்கணித்தனர்.
இதனால், ஒத்திவைக்கப்பட்ட கிராமசபா நேற்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு சார்பில், முதலிபாளையம் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் திரண்டு, பாடை கட்டும் போராட்டம் நடத்தினர். தென்னை ஓலையில் பாடை கட்டி, குப்பை கழிவுகளால் மாசடைந்து விஷமாக மாறிய நீரை பாட்டிலில் அடைத்து, பாடையில் வைத்து, தாரை தப்பட்டை அடித்து, சமுதாய நலக்கூடம் அருகே கொண்டுவந்து வைத்தனர்.
பெண்கள் அனைவரும் சுற்றிநின்று, 'தண்ணீரெல்லாம் கெட்டுப்போச்சே; மாடு கன்னு செத்துப்போச்சே' என ஒப்பாரி வைத்தனர். தொடர்ந்து கிராமசபாவை புறக்கணித்து சென்றனர். இதனால், மூன்றாவது முறையாக கிராமசபா ஒத்திவைக்கப்பட்டது.
இதுபோலவே, இடுவாய், 63 வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம் பகுதிகளிலும், பொதுமக்கள் நேற்று கிராமசபாவை புறக்கணித்தனர்.
மாநகராட்சி குப்பை பிரச்னைக்காக நான்கு கிராமங்களில் பொதுமக்கள் கிராமசபாவை தொடர்ந்து புறக்கணித்ததால், உள்ளாட்சி அமைப்பினர் செய்வதறியாமல் திணறுகின்றனர்.

