/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுரங்க பாலங்களில் தேங்கும் தண்ணீர் பிரச்னைக்கு தேவை நிரந்தர தீர்வு
/
சுரங்க பாலங்களில் தேங்கும் தண்ணீர் பிரச்னைக்கு தேவை நிரந்தர தீர்வு
சுரங்க பாலங்களில் தேங்கும் தண்ணீர் பிரச்னைக்கு தேவை நிரந்தர தீர்வு
சுரங்க பாலங்களில் தேங்கும் தண்ணீர் பிரச்னைக்கு தேவை நிரந்தர தீர்வு
ADDED : பிப் 18, 2025 09:57 PM

உடுமலை; உடுமலை பகுதியிலுள்ள ரயில்வே சுரங்க பாலங்களில், தேங்கும் தண்ணீரை வெளியேற்ற, நிரந்தர கட்டமைப்புகளை ஏற்படுத்தி, போக்குவரத்து துண்டிக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில், உடுமலை பகுதியில், 25க்கும் மேற்பட்ட மழை நீர் ஓடைகள் குறுக்கிடுகின்றன.
மேலும், கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு பாதைகளிலும், ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுகிறது.
இந்த வழித்தடம், அகல ரயில்பாதையாக மேம்படுத்தப்பட்ட போது, மழை நீர் ஓடைகள் கடக்கும் பகுதி மற்றும் இணைப்பு பாதைகளுக்கான சுரங்கப்பாதைகளில், மாற்றம் செய்யப்பட்டது.
இதில், பெரும்பாலான இடங்களில், கட்டப்பட்ட பாலங்களில், தண்ணீர் வெளியேற வழியில்லை. முன்பு, இந்த சுரங்க பாலங்களை ஒட்டி, தண்ணீரை வெளியேற்றும் வகையில், இன்ஜின் ரூம் அமைக்கப்பட்டது.
மழைக்காலங்களில், இந்த இன்ஜின்களை இயக்கி, தண்ணீரை வெளியேற்றி வந்ததால், போக்குவரத்துக்கு இடையூறு தவிர்க்கப்பட்டது. படிப்படியாக இந்த நடைமுறை கைவிடப்பட்டது.
இதனால், மடத்துக்குளம் முதல் முக்கோணம் வரை, பல இடங்களில், இணைப்பு பாதையிலுள்ள சுரங்கப்பாதைகளில், தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பது தொடர்கதையாக உள்ளது.
குறிப்பாக, நகரை ஒட்டி, மருள்பட்டி, பெரியார் நகர், தளி ரோடு, ராகல்பாவி இணைப்பு ரோடு உள்ளிட்ட இடங்களில், சுரங்க பாலங்களில், பல மாதங்களாக தண்ணீர் தேங்கி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும், கழிவு நீரும் கலந்து, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. சில பாலங்களில் மட்டும், மழை நீர் உள்ளே செல்வதை தடுக்கும் வகையில், மேற்கூரை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், அப்பணிகளும் நிறைவு பெறாமல் இழுபறியாக உள்ளது.
இப்பிரச்னைக்கு, ரயில்வே நிர்வாகமும், அருகிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து, பாலத்தில், தண்ணீரை வெளியேற்ற நிரந்தர கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

