அமராவதி அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி!: 2 தாலுகாவில் குளங்களின் பட்டியல் வெளியீடு
அமராவதி அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி!: 2 தாலுகாவில் குளங்களின் பட்டியல் வெளியீடு
UPDATED : ஜூலை 31, 2026 06:10 PM
ADDED : ஜூலை 31, 2026 05:31 PM

உடுமலை: நீர் நிலைகளை துார்வாரி ஆழப்படுத்தி கூடுதல் நீர் சேமிக்கும் வகையிலும், விளை நிலங்களை வளமாக்கும் வகையிலும், அமராவதி அணை மற்றும் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள குளம், குட்டைகளுக்கு விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 90 அடி உயரமும், 4,047 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவும் கொண்ட அணை, பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல், வண்டல் மண் தேங்கியுள்ளது.
இதனால், மழை காலங்களில் பெய்யும் மழை நீரை முழுமையாக சேமிக்க முடியாமல், வீணாகிறது. அணையை முழுமையாக துார்வாரி, கூடுதல் நீர் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நடப்பாண்டு, கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவ மழை ஏமாற்றியதால், அணை நீர்மட்டம் அதல பாதாளத்தில் உள்ளது.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அணையில் கூடுதல் நீர் தேக்கும் வகையிலும், விளை நிலங்களை வளமாக்கும் வகையிலும், விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில், அமராவதி அணையில், சர்வே எண், 23, 24ல், 7.15 ஏக்கர் பரப்பளவில் தேங்கியுள்ள, 55 ஆயிரத்து, 913 கன மீட்டர் வண்டல் மண் எடுத்துக்கொள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
என்னென்ன குளங்கள் அதே போல், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், நீர் வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, குளம், குட்டைகளில் சேர்ந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகியவற்றை, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ள அனுமதியளித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், மடத்துக்குளம் தாலுகா, சங்கராமநல்லுார் தெற்கு, முத்துக்குளத்தில், 3,105 கனமீட்டர் மண் எடுத்துக்கொள்ளவும், ஒட்டுக்குளத்தில், 1,831 கனமீட்டர், குயவன் குட்டை குளத்தில், 3,005 கனமீட்டர் மண் எடுத்துக்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழுமத்தில் மிகப்பெரிய குளமாக உள்ள கோதையம்மன் குளத்தை துார்வாரும் வகையில், 48 ஆயிரத்து, 956 கனமீட்டர் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதே போல், உடுமலை தாலுகாவில், தின்னப்பட்டி பீச்சன் குட்டை, கே.ரெட்டிபாளையம் சர்க்கார்புதுார் குட்டை, மாரியம்மன் கோவில் குட்டை, உடுக்கம்பாளையம் குட்டை, மொடக்குப்பட்டி, பூலாங்கிணர், புங்கமுத்துார் நவக்கரை குட்டை மற்றும் புங்கமுத்துார் குட்டை, ராவணாபுரம் குட்டை, பெரியவாளவாடி கடையர் குட்டை,
நடுக்குட்டை, கணபதிபாளையம் கரையான் குட்டை, கருட்டுரையான் கோவில் குட்டை, பெரியபாப்பனுாத்து, செங்குட்டை, மங்களாபுரம் குட்டை, சின்னபாப்பனுாத்து குட்டை மற்றும் கண்ணநாயக்கனுார் ஊராட்சி மருள்பட்டி குளத்தில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
விவசாய பயன்பாட்டிற்கு, ஒரு ஏக்கர் நன்செய் நிலமாக இருந்தால், 75 கனமீட்டர், புன்செய் நிலமாக இருந்தால், 90 கனமீட்டர் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்களுக்கு, 60 கனமீட்டர் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படும்.
நீர் நிலைகளில் மண் எடுக்க, விருப்பம் உள்ள விவசாயிகள், இ-- சேவை மையங்களில், https://tnesevai.tn.gov.inவாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரிகள் அனுமதியளித்த பகுதியில், நீர் நிலைகள், கரைகள் உள்ளிட்ட கட்டுமானங்கள் பாதிக்காதவாறு மண் அள்ள வேண்டும், மரங்கள், மதகுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது, கரையின் உயரத்திலிருந்து, ஐந்து மடங்கு துாரத்திற்கு அப்பால் மண் எடுக்க வேண்டும் உள்ளிட்ட, 24 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
