UPDATED : செப் 26, 2026 07:37 PM
ADDED : செப் 26, 2026 07:30 PM

திருப்பூர்:புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, திருப்பூர் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் துளசி மாலை சாற்றியும், நெல்லிக்கனி சமர்ப்பித்தும் பெருமாளையும் தாயார்களையும் வழிபட்டனர்.
இந்தாண்டு புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகள் வருகின்றன. இதையொட்டி, இரண்டாவது சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் அதிகாலை 5:30 மணிக்கு, ஸ்ரீவீரராகவப் பெருமாள் பாண்டியன் கொண்டை கிரீட அலங்காரத்தில், கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் துளசி மாலை சாற்றியும், நெல்லிக்கனி சமர்ப்பித்தும் பெருமாளை வழிபட்டனர். திருப்பூர் பிரதோஷ வழிபாட்டுக் குழு சார்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அவிநாசி அருகே தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், மொண்டிபாளையம் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோவில், கருவலூர் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில்கள், சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில், அவிநாசி காரணப்பெருமாள் கோவில் உள்ளிட்ட திருப்பூர், அவிநாசி, பல்லடம் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
