/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூச்சி தாக்குதல் மேலாண்மை தோட்டக்கலை கண்காட்சி
/
பூச்சி தாக்குதல் மேலாண்மை தோட்டக்கலை கண்காட்சி
ADDED : மார் 29, 2025 06:18 AM

திருப்பூர் : திருப்பூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில், காய்கறி பயிர்களின் நோய் மேலாண்மை குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும், மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தின் போது, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், கண்காட்சி அமைக்கப்படுகிறது. அரசு திட்டங்கள் குறித்து, கண்காட்சி நடந்து வருகிறது.
அதன்படி, நேற்று, திருப்பூர் தோட்டக்கலைத்துறை சார்பில், கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியில், தென்னை, வாழை, சின்ன வெங்காயம், தக்காளி, சீதாபழம் என, பல்வேறு காய்கறி பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல் மற்றும் நோய் தாக்குதல் குறித்து, காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
பூச்சி தாக்குதல் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்தும், நோய் தாக்கம் குறித்தும், அவற்றிற்கான தடுப்பு முறைகள் குறித்தும், விளக்க கையேடுகளும் வைக்கப்பட்டிருந்தன.
விவசாயிகள், கண்காட்சியை பார்வையிட்டு, நோய் தாக்குதல் மற்றும் பூச்சி தாக்குதல் மற்றும் அவற்றின் தடுப்பு வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் புனிதவேணி தலைமையிலான குழுவினர், கண்காட்சியை அமைத்திருந்தனர். வேளாண்துறை சார்பில், கம்பு மற்றும் சோளப்பயிர்களையும், அவற்றின் விதைகளையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.