/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கையில் மனு; மனதில் தீர்வுக்கான நம்பிக்'கை'
/
கையில் மனு; மனதில் தீர்வுக்கான நம்பிக்'கை'
ADDED : டிச 02, 2025 07:03 AM

திருப்பூர்: பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
மின் இணைப்பு தாமதம்
திருப்பூர் செட்டிபாளையம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்கள்: குடியிருப்பில், சில வீடுகளுக்கு மீட்டர் மட்டுமே பொருத்தியுள்ளனர், இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஒயரிங் வேலைகளும் சரிவர மேற்கொள்ளவில்லை. புதிய வீட்டில் குடியேற முடியவில்லை. குடியிருப்பை சுற்றி, கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தி தரவேண்டும்.
சாலையோரம் கழிவுகள்
பல்லடம் பாலகிருஷ்ணன்: திருப்பூர் தெற்கு தாலுகா, மங்கலம் ஊராட்சியில், சாலையோரங்களில் மாட்டு இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மாட்டு இறைச்சியை, பொது வெளியில் தொங்கவிட்டு விற்கின்றனர். கலெக்டர் அறிவுறுத்தியும் மக்களின் புகாரை கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்பு அதிகாரி மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டா வழங்க வேண்டும்
வெற்றி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க தலைவர் சக்கரையப்பன், மாற்றுத்திறனாளிகள்:
உடுமலை தாலுகாவில், மாற்றுத்திறனாளிகள், வாடகை வீடுகளில், சிரமமான சூழலில் வசித்துவருகின்றனர். 145 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு, ஐந்து ஆண்டுகளாக கலெக்டரிடம் மனு அளித்து வருகிறோம். சோமவாரப்பட்டியில் 100 பேர், சின்ன வீரம்பட்டியில் 25 பேர், எலையமுத்துாரில் 65 பேர் ஆகியோருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்காமல், ஒதுக்குகின்றனர். மாற்றுத்திறனாளிகள் 145 பேருக்கு பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊத்துக்குளி தாலுகாவில், 93 மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டு நுாறு நாட்களுக்கு மேலாகிறது; அந்த இடத்தை அளந்து கொடுக்காமல் இழுக்கின்றனர்.
கந்து வட்டி கொடுமை
நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம்:
திருப்பூரில் பனியன் தொழிலாளர் பலர், கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்குகின்றனர். கடன் பெறுவோரிடம், வட்டிக்கு பணம் கொடுப்போர் மிக மோசமாக நடந்து கொள்கின்றனர். பணம் திருப்பிச் செலுத்த தாமதம் ஏற்பட்டால், குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி, அவமானப்படுத்துகின்றனர். பணம் இல்லை என்று சொன்னால், வீட்டிலிருந்து 'டிவி', பேன் போன்ற பொருட்களை துாக்கிச் சென்று விடுகின்றனர். கந்துவட்டி நபர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை.
அடிப்படை வசதி வேண்டும்
த.வெ.க. நிர்வாகிகள்:
திருப்பூர் மாநகராட்சி, 5வது வார்டு, வாவிபாளையம் - வாரணாசி நகர் பகுதி தார் ரோடு, குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. பேட்ஜ் ஒர்க் செய்யாமல், பழைய ரோட்டுக்கு மேல் ஜல்லியை பரப்பி, புதிய ரோடு அமைத்துள்ளனர். தார் ரோட்டை புதுப்பித்து, பாதாள சாக்கடை வசதி செய்துதரவேண்டும்.
இவ்வாறு, நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் வழங்கிய மொத்தம் 306 மனுக்கள், பதிவு செய்யப்பட்டன.

