ADDED : பிப் 01, 2025 12:22 AM
அனுப்பர்பாளையம்; இ.கம்யூ., கட்சியின் திருப்பூர் இரண்டாவது மண்டல குழு செயலாளர் சசிகுமார், மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்செல்வி, ஆகியோர் டாஸ்மாக் மாவட்ட மேலாளரை சந்தித்து அளித்த மனு:
கொங்கு மெயின் ரோடு இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில் ரங்கநாத புரம் இரண்டாவது வீதியில் டாஸ்மாக் மதுக்கடை (எண்: 1909) பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மது கடையால், பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மதுக்கடை இரவு - பகல் எந்த நேரமும் செயல்பட்டு வருகிறது.
மது அருந்த வருபவர்கள் தங்கள் வாகனங்களை ரோட்டின் இரு பக்கமும் நிறுத்தி கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். போதை ஆசாமிகளின் அட்டகாசத்தால் மாணவர்கள் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குடியிருக்கவே மக்கள் அச்சப்படுகின்றனர்.
மக்களின் நலன் கருதி மதுக்கடையை உடனடியாக இடமாற்றம் செய்து, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், அப்பகுதி பொது மக்களுக்கும், அமைதியான வாழ்க்கைக்கான உத்தரவாதத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.
கடையை இடமாற்றம் செய்ய காலதாமதம் செய்தால் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்துவோம்.