/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குவிந்தன மனுக்கள்... கிடைக்குமா தீர்வுகள்!
/
குவிந்தன மனுக்கள்... கிடைக்குமா தீர்வுகள்!
ADDED : பிப் 04, 2025 07:39 AM

திருப்பூர்; கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கரையோர ஆக்கிரமிப்பு
உடுமலையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் நாகராஜன் அளித்த மனு:
உடுமலை தாலுகா, மொடக்குட்டி கிராமத்தில், பி.ஏ.பி., வாய்க்கால் கரையோர 45 சென்ட் அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளார். தென்னை நடவு செய்து, கம்பிவேலி அமைத்துள்ளார். ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டும் பி.ஏ.பி., அதிகாரிகள் அகற்றாமல் காலம்தாழ்த்துகின்றனர். அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.
பொதுச்சொத்து ஆக்கிரமிப்பு
தாராபுரம் தாலுகா, அலங்கியம் கிராம மக்கள் மனு அளித்த பின் கூறியதாவது:
அலங்கியம், காந்தி நகரில், 2 சென்ட் ஊர் பொது இடத்தில், ஓட்டு கட்டடத்தில் மாணவ, மாணவியருக்கு மாலை நேரம் இலவச டியூஷன் நடத்தப்பட்டுவந்தது. இங்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பொதுமக்கள் இணைந்து நிதி வசூலித்தோம்.
ஓய்வுபெற்ற ஆசிரியர் இருவர் உள்பட ஏழு பேர், நன்கொடை வசூலித்து, புதிய கட்டடம் கட்டித்தருவதாக கூறினர். இதையடுத்து, அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தோம். ஆனால் அவர்கள், அறக்கட்டளை ஏற்படுத்தி, பொதுச்சொத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயல்படுகின்றனர். நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு மீட்டுக்கொடுக்கவேண்டும்.
தடுப்புச்சுவர் அகற்றுங்கள்
ஆகாசராயர் திருக்கோவில் மீட்புக்குழுவினர் அளித்த மனு:அவிநாசி தாலுகா, வேலாயுதம்பாளையத்தில் 300 ஆண்டு பழமையான ஆகாசராயர் கோவில் உள்ளது. அவிநாசி சுற்றுப்பகுதி மக்கள், கிடா, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி, வழிபட்டுவருகின்றனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், குறிப்பிட்ட சமூக மக்கள் பயன்படுத்தும் மண்டபங்களை தடுப்புச்சுவர் அமைத்து தடுத்துள்ளனர். கிடா பலியிடப்படும் இக்கோவிலை, சைவ கோவில் என, தவறான தகவல்களை பரப்புகின்றனர். ஆகாசராயர் கோவிலில், தடுப்புச்சுவரை அகற்றி, சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டவேண்டும்.
தெருவிளக்குகள் இல்லை
அவரப்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனு:
திருப்பூரில், வீரபாண்டி, மீனம்பாறை வழி, அவரப்பாளையம் வரை 2 கி.மீ., துாரத்துக்கு தெருவிளக்குகள் இல்லை. ரோட்டில் புதர் மண்டியுள்ளது. இரண்டு இடங்களில் குப்பை மலைபோல் தேங்கியுள்ளது. இரவு நேரங்களில் ரோட்டை பயன்படுத்த முடிவதில்லை.
வீரபாண்டி முதல் மீனம்பாறை வரை தெருவிளக்கு அமைத்துத் தரவேண்டும். முட்புதர், குப்பைகளை அகற்றவேண்டும். மிகப்பெரிய வேகத்தடைகளை மாற்றி, சிறிய வேகத்தடை அமைக்கவேண்டும். வீரபாண்டியில் திரும்பிச்செல்லும் இரண்டு மினி பஸ்களையும், அனுமதி பெற்றுள்ள அவரப்பாளையம் வரை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கிரயம் செய்து தர மறுப்பு
பல்லடம், சித்தம்பலம் கிராமத்தில், வீட்டு மனைகளுக்கு 9 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு, கிரயம் செய்துதர மறுக்கும், ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது நவடிக்கை எடுக்ககோரி, பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.
மொத்தம் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தன. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
-

