/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகாரிகளிடம் மனுக்கள்... தீர்வுகள் விரைவில்
/
அதிகாரிகளிடம் மனுக்கள்... தீர்வுகள் விரைவில்
ADDED : டிச 03, 2024 07:04 AM

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
அடிப்படை வசதி இல்லை
கூடுதுறை தோட்ட பொதுமக்கள்: ஊத்துக்குளி தாலுகா, கூடுதுறை தோட்டத்தில், 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மழைக்காலங்களில் ரோடு சேறும் சகதியுமாகிவிடுகிறது. ஆம்புலன்ஸ்கள் கூட சென்றுவர முடிவதில்லை. விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை நீடிக்கிறது.
சிறுவர் பூங்கா அவசியம்
எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்போர் நலச்சங்கம்: எங்கள் பகுதி வழியாக நொய்யல் கரை சாலைக்கு, வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன. சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எஸ்.ஆர்., நகர் வழியாக நொய்யல் கரை சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கவேண்டும். நேதாஜி மெயின் வீதி மற்றும் ஒன்பதாவது வீதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில், சிறுவர் பூங்கா அமைத்துக் கொடுக்க வேண்டும். தெருநாய் தொல்லைக்கு தீர்வு காணவேண்டும்.
மீண்டும் ஆக்கிரமிப்பு
ஹிந்து மக்கள் கட்சி: திருப்பூர் மாநகராட்சியால் மீட்கப்பட்டு 'சீல்' வைக்கப்பட்ட இடத்தில், மீண்டும் தனியார் ஆக்கிரமித்து நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த கோரியும், சான்றிதழில் ஹிந்துவாகவும், நடைமுறையில் வேறு மதத்தினராகி, இரட்டை சலுகை பெறுவோரை கண்டறிந்து, சலுகைகளை ரத்து செய்யவேண்டும்.
பஸ்கள் விதிமீறல்
அகில பாரத இந்து மகா சபா திருப்பூர் மாவட்ட தலைவர் வல்லபைபாலா மற்றும் நிர்வாகிகள்: கோவை, ஈரோடு, சத்தியமங்கலம், பொள்ளாச்சி, தாராபுரம் செல்லும் தனியார் பஸ்கள், கூடுதல் பயணிகளை ஏற்றுவது, அதிவேகமாக செல்வது போன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுகின்றன. மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறை அதிகாரிகளும், விதிமீறும் தனியார் பஸ்களை கண்டறிந்து உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
15 வேலம்பாளையம், ஜி.எம்., பாலன் நகரில் கட்டுமான பணிகள் முடிவடைந்த ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தோட்டத்துபாளையத்தில் கடந்த ஜனவரி 5ம் தேதி திறக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
நடவடிக்கை தேவை
மக்களிடமிருந்து மொத்தம் 425 மனுக்கள் பெறப்பட்டன. தங்கள் மனுக்கள் மீது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்; மனுக்கள் மீது எடுக்கப்பட்ட குறித்து விவரங்கள் தெரிவிக்கவேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பு.