/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
4.67 லட்சம் தொழிலாளருக்கு பி.எப். தொகை விடுவிப்பு
/
4.67 லட்சம் தொழிலாளருக்கு பி.எப். தொகை விடுவிப்பு
4.67 லட்சம் தொழிலாளருக்கு பி.எப். தொகை விடுவிப்பு
4.67 லட்சம் தொழிலாளருக்கு பி.எப். தொகை விடுவிப்பு
ADDED : ஜன 30, 2026 07:08 AM

திருப்பூர்: திருப்பூர் பி.எப். மண்டலத்தில், நடப்பு நிதியாண்டின் பத்து மாதங்களில், தொழிலாளர்களின், 4 லட்சத்து 67 ஆயிரத்து 536 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு, தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன (பி.எப்.) திருப்பூர் மண்டல அலுவலகம், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தொழில் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
முதல்தளத்தில் மண்டல அலுவலகம் செயல்படும் நிலையில், தரைதளத்தில், புதிதாக மக்கள் தொடர்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற விழாவில், கோவை மண்டல கூடுதல் கமிஷனர் கஸாலா அலிகான், மக்கள் தொடர்பு அலுவலகத்தை திறந்துவைத்து, பார்வையிட்டார். அதன்பின், அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
தொடர்ந்து நடந்த கூட்டத்துக்கு, பி.எப்., திருப்பூர் மண்டல கமிஷனர் அபிஷேக் ரஞ்சன் முன்னிலைவகித்தார். கோவை மண்டல கமிஷனர்கள் ஹரி ஓம் ஜெய்சுவால், ஜோஷி உள்பட அதிகாரிகள் மற்றும் பி.எப். ல் உறுப்பினராக உள்ள நிறுவனத்தினர் பங்கேற்றனர்.
பி.எப். கமிஷனர் அபிஷேக் ரஞ்சன் பேசியதாவது:
இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி நகரான திருப்பூர், மிகப்பெரிய பொருளாதார மையமாக உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூர், 55 சதவீத பங்களிப்பு செலுத்திவருகிறது. ஆண்டுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை ரகங்களை, உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்துவருகிறது.
தொழில் வளர்ச்சி மட்டுமின்றி, தொழிலாளரின் சமூக பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்திவருகின்றனர். மாவட்டத்தில், பி.எப்.,ல் பதிவு செய்த 11 ஆயிரத்து 312 நிறுவனங்கள் உள்ளன.
ஒட்டுமொத்தமாக 33 லட்சம் தொழிலாளர், பி.எப். கணக்கில் உள்ளனர். இவர்களில், தற்போது, 3 லட்சத்து 25 ஆயிரத்து 37 தொழிலாளருக்கான பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டுவருகிறது. ஒன்பதாயிரத்து 600 ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.
2024 - 25ம் நிதியாண்டில், பி.எப். கணக்கில் தொகை பெறுவதற்கான 5,38,871 விண்ணப்பங்கள் தீர்வு காணப்பட்டு, தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2025 - 26ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாதங்களில், 4 லட்சத்து 67 ஆயிரத்து 536 விண்ணப்பங்கள் தீர்வுகாணப்பட்டு, உரிய தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
இறந்த பி.எப். உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு, ஓய்வூதிய உத்தரவுகள் வழங்கப்பட்டன. விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த பி.எப். அலுவலர்களுக்கு பதக்கங்கள், பரிசளிக்கப்பட்டது.

