ADDED : ஏப் 19, 2025 11:36 PM

திருப்பூர்: திருப்பூர், கூலிபாளையம் பாலம், நல்லுார், காசிபாளையம் செல்லும் வழியில் நொய்யல் ஆற்றை ஒட்டி குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுத்துபவரை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்காததால், கழிவுகளை வீசிச்செல்லும் செயல் தொடர்கிறது.
நொய்யல் ஆற்றில் வளம்பாலம் முதல் மணியகாரம்பாளையம் வரை கழிவுகளை ஆற்றில் வீசி எறியாமல் இருக்க, கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. நல்லுார், காசிபாளையம், கூலிபாளையம் சந்திப்பு, சிட்கோ உள்ளிட்ட வழித்தடங்களில், நொய்யல் கரைகளின் இருபுறமும் கம்பிவேலி இன்னமும் அமைக்கவில்லை.
இதனை சாதகமாக்கி கொண்டு, இரவு நேரம் மட்டுமின்றி, பகலிலும் கழிவை கொட்டும் இடமாக நொய்யலை மாற்றி வைத்துள்ளனர். குப்பைகள் மட்டுமின்றி, இறைச்சி கழிவுகளை ரோட்டோரம் வீசியெறிப்படுவதால், இவற்றை தின்ன நாய்கள் கூட்டமும் படையெடுக்கிறது.
ஆறு, நொய்யலை ஒட்டி பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துபவரை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்காததால், கழிவுகளை வீசுவது தொடர்கிறது.
எஸ்.பெரியபாளையம் ஊராட்சி சார்பில், சாலையோரங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் வீசுபவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்,' என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அவ்விடத்திலேயே குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து அபாராதம் விதிக்க வேண்டும்.