ADDED : ஜன 28, 2026 08:06 AM

பல்லடம்: பல்லடம் தெற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் பிரதீப் சக்தி, கலெக்டர் மற்றும் பி.டி.ஓ.,விடம் அளித்துள்ள மனு:
பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி ஊராட்சி, பாலசமுத்திரம், அம்மன் நகர் பகுதியில், 2019ல் நேரடியாக குடிநீர் வினியோகிக்க, 7.73 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பணிகள் பாதியில் கைவிடப்பட்டன.
அதன்பின், பொதுமக்கள் பலமுறை குடிநீர் கேட்டும், குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதற்கிடையே, பொது தொட்டியில் வினியோகிக்கப்படும் குடிநீருக்காக, மாதம், 120 ரூபாய்போட்டு வசூலிக்கப்பட்டு வருவது குறித்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ஏற்கனவே புகாரும் அளித்துள்ளோம்.
கடந்த, 2019ல், கொண்டு வரப்பட்ட திட்டத்தை செயல்படுத்தாமல் கைவிட்டது ஏன் என்பது குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது, திடீரென அம்மன் நகருக்கு குழாய் பதிக்கும் பணி அவசர கதியில் நடந்து வருகிறது.
மேலும், இதற்காக ஊராட்சி நிர்வாகத்தில் எவ்வித அனுமதியும் பெறவில்லை. ஊராட்சி செயலருக்கும் கூட தெரியாமல், பணி நடந்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த கால ஊழல், முறைகேடுகளை மறைக்கவே, குழாய் பதித்து வருவதாக சந்தேகிக்கிறோம்.
எனவே, அரசு அனுமதியின்றி நடந்து வரும் பணிகள் குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
